சென்னை: அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தன் மகனைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கடந்த 6 ஆம் தேதி அம்பேத்கர் பற்றிய 'வாய்ஸ் ஆப் காமன்' தயாரித்த நூலை விஜய் வெளியிட்டு இருந்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜுனா தனது இளமைக் காலம் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு உண்மையை மேடையில் போட்டு உடைத்திருந்தார். அந்த விழாவில் பங்கேற்றவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் அந்தச் செய்தி ஆச்சரியத்தை அளித்தது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி தனது பெரியம்மா என்று அவர் கூறியதோடு, அவரது உதவியால்தான் வாழ்க்கையில் வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே குடும்ப வன்முறையால் தனது தாயை இழந்துவிட்டேன். அதன் பின்னர் பெரியம்மா திலகவதி தான் எனக்கு வழிகாட்டியாக இருந்தார் என்று ஆதவ் பேசி இருந்தார். அதே மேடையில் திலகவதியை அழைத்து அவர் மரியாதை செலுத்தி இருந்தார். ஊடக உலகில் பல ஆண்டுகளாக அறியப்பட்டவர் திலகவதி. அவர் ஒரு காவல் அதிகாரி மட்டுமல்ல ஒரு எழுத்தாளர். சாஹித்ய அகாதெமி விருது வாங்கியவர். அரசியல் சர்ச்சையில் ஆதவ் அடிபட்டபோது கூட அவர் எங்கேயும் தனது உறவினர் என்பதை வெளிப்படுத்தியதே இல்லை.
இந்நிலையில்தான் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் மேடையில் தனது பெரியம்மா திலகவதியை அறிமுகம் செய்து வைத்தார். சிறு வயது முதலே ஆதவ் அவரது பெரியம்மா அரவணைப்பிலிருந்துள்ளார். 2004 வரை இந்த உறவு தொடர்ந்துள்ளது. அதன்பின் லாட்டரி அதிபர் மார்டின் மகள் டெய்சியை அவர் காதல் திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த உறவு பெரிய அளவில் இல்லை, இடைவெளி விழுந்துள்ளது.
பலரும் ஆதவ் பின்புலத்தைப் பற்றி ஆராயத் தொடங்கி இருக்கும் நிலையில், அவரைப் பற்றிய நினைவுகளை திலகவதி ஐபிஎஸ் தனது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கலாட்டா வாய்ஸ் சேனலுக்கு பேசுகையில், "ஆதவ் அர்ஜுனா என் சொந்த தங்கச்சி மகன். என் பெரியப்பா ஒரு கான்ஸ்டபிள். அவருக்கு மொத்தம் 17 பிள்ளைகள். அதில் சில குழந்தைகள் இறந்து போய்விட்டன. மீதி 8 ஆண்பிள்ளைகள். 6 பெண்கள். அவர் சென்னையில்தான் குடியிருந்தார். எனக்கு தருமபுரிதான் சொந்த ஊர். அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே மகள். சிறுவயதில் பெரியப்பா வீட்டுக்கு நான் வந்ததே இல்லை. கல்லூரி படிப்புக்காகச் சென்னை வந்த போது விடுதியில் தங்க இடம் கிடைக்கும் வரை அவர் வீட்டில் தங்கினேன்.
பெரியப்பாவின் 6 பெண் குழந்தைகளில் ஆதவ் அர்ஜுனாவின் அம்மா கல்யாணிதான் நெருக்கமாக இருந்தார். இளம் வயதில் கல்யாணி என்னைப் போலவே இருப்பாள். அவளை ஒரு வங்கி அதிகாரி பெண் கேட்டு வீட்டுக்கு வந்தார். அதைக் கேட்டு என் பெரியம்மா எரிச்சலாகிவிட்டார். என் பெரியப்பா உடனே 10 நாட்களில் கல்யாணிக்கு அவசரமாக காட்பாடி பக்கம் உள்ள லத்தேரி கிராமத்திலிருந்த ஒரு விவசாயிக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார். அங்கே மாமியார் கொடுமை தாங்காமல் கல்யாணி மிளகாய் செடிக்கு அடிக்கும் மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாள். அப்போது அர்ஜுனுக்கு 4 வயதுதான்" என்று கூறியிருக்கிறார்.
ஆதவ் அர்ஜுனாவின் அம்மா இறந்த பின் திலகவதியின் பெரியப்பா மகன் ஒருவர் திருச்சியில் வசதியான நிலையிலிருந்துள்ளார். அவருக்கு ஆண் வாரிசு இல்லை. எனவே அவர் அர்ஜுனை எடுத்து வளர்த்துள்ளார். அர்ஜுன் தங்கையை மற்றொரு அண்ணன் சென்னையில் வைத்து வளர்த்து ஆளாகியுள்ளார். ஆக, ஆதவ் இளமைக் காலம் வறுமையில் சிக்கித் தவித்துள்ளது. கூடவே பெற்றோரை இழந்த பிள்ளையாக அவர் இருந்துள்ளார்.
இளம் வயதிலிருந்தே அர்ஜுனுக்கு விளையாட்டு மீது தீராத விருப்பம் இருந்துள்ளது. சிறு வயதிலேயே அதிகாலையில் எழுந்து பல மணிநேரம் முறையாக விளையாட்டுக்காகப் பயிற்சி எடுத்துள்ளார். தன் வாழ்வில் சுய முன்னேற்றத்தில் வளர்ந்த ஒருவன் ஆதவ் தான் என்கிறார் திலகவதி.
திருச்சியில் உள்ள ராமகிருஷ்ணா மடத்திற்குச் சொந்தமான பள்ளியில் படித்ததால் விவேகானந்தர் மீது ஈடுபாடு இயல்பாக இருந்துள்ளது. அந்தப் பாதிப்பில்தான் அவர் தொடங்கிய நிறுவனத்திற்கு அரைஸ் என்று பெயர் வைத்துள்ளார். அது விவேகானந்தர் புகழ்பெற்ற வாசகத்தில் எடுக்கப்பட்டது.
ஒரு காலத்தில் விவேகானந்தர், அப்துல்கலாம் எனச் சுயமுன்னேற்றம் சார்ந்து படித்து வந்த ஆதவ், பின்னர் காந்தி, அம்பேத்கர் என தன் கவனத்தை வேறு பக்கம் செலுத்தி இருக்கிறார். அவருக்கு ஒடுக்கப்பட்ட அரசியல் மீது ஆர்வம் வந்துள்ளது அதை வைத்தே அவர் திருமா பக்கம் சென்றுள்ளார். "சிறுவயதிலிருந்தே துடிப்பாக எதையும் செய்வான். அந்தத் துடிப்பே அவனை இப்போது இந்த நிலைக்குத் தள்ளிவிட்டது" எனப் பேசி இருக்கிறார் அவரது பெரியம்மா. இதையேதான் திருமாவளவன் பொதுவாழ்வில் பொறுமை முக்கியம் என்று வேறுமாதிரி அட்வைஸ் வழங்கி இருக்கிறார்.