AI தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படுமா? வந்து விழுந்த கேள்வி.. அமைச்சர் பிடிஆர் நறுக் பதில்

post-img
கோவை: இந்த காலத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது தான் மிகப் பெரிய ஆர்வம் இருக்கிறது. இருப்பினும், ஏஐ வளர்ச்சியால் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்களிடையே ஒருவித கருத்து பரவி வருகிறது. இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் ஏஐ அதாவது செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் திறக்கப்பட்டது. இதைத் தமிழ்நாட்டின் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய தினம் திறந்து வைத்தார்.. அமைச்சர் பிடிஆர்: அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிடிஆர், "கடந்த மாதம் கோவையில் எல்கார்ட் பாரக் திறந்து வைத்தோம். கடந்த ஆட்சியாளர்கள் அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டு இருந்தார்கள். நாங்கள் தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று அந்த எல்கார்ட் பார்க்கை திறந்தோம். அகிவ் ஏற்கனவே சுமார் 2.30 லட்சம் சதுர அடி நிலத்தில் ஐடி நிறுவனங்கள் வந்துவிட்டன. சில நிறுவனங்கள் முழு கட்டிடத்தை எடுக்கக் கூட தயாராகவே இருந்தனர். அந்தளவுக்குத் தேவை அதிகமாக இருக்கிறது. இந்த துறைக்கு என்னை அமைச்சராக நியமித்த பிறகு, ஒவ்வொரு மாதமும் வெளிநாடு சென்று தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்த்து வருகிறோம். கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் சென்னையில் ஒருகோடி சதுரடிக்கு மேல் ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன. கோவையிலும் கூட இதே அளவுக்கு ஐடி நிறுவனங்களைக் கொண்டு வரத் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது. குளோபல் ஃபின்சிட்டி, டைடல் மற்றும் மினி டைடல் பார்க்குகள் மிகச் சிறப்பாகவே தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. சர்வதேச நிறுவனங்களைத் தமிழகம் அழைத்து வர முயன்று வருகிறோம். தமிழர்கள் அதிகம்: மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஐடி நிறுவனங்களில் அதிகளவில் தமிழர்களே இருக்கிறார்கள். இங்குள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்வோரில் சுமார் 90 சதவீதம் தமிழர்களாகவே உள்ளனர். அதேநேரம் பெங்களூரில் இது வெறும் 25 சதவீதமாக இருக்கிறது. திறமை வாய்ந்தவர்கள் அதிகம் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார்கள். மற்ற மாநிலங்கள் உடன் ஒப்பிடுகையில் நம் தமிழ்நாட்டின் திறன் அதிகமாகவே இருக்கிறது. வெறும் ஆறு சதவீத மக்கள் தொகை இருந்தாலும் சுமார் 20 சதவீதம் உற்பத்திக்கான திறன் உள்ளவர்களைத் தமிழகம் உருவாக்குகிறது. நாம் சரியான பாதையிலேயே சென்று கொண்டு இருக்கிறோம். துபாய் போல நம்ம கோவையிலும் ஏஐ மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார். ஏஐ காரணமாக வேலையிழப்பு ஏற்படுமா: ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாக வேலையிழப்புகள் ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ஏஐ காரணமாக வேலையிழப்புகள் ஏற்படத் தொடங்கவே 20 ஆண்டுகளுக்கு மேலாகும். நாம் இப்போது ஏஐ துறையில் 5ம் வகுப்பில் தான் இருக்கிறோம். ஏஐ துறையில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக நீண்டது. அதற்குப் பல ஆண்டுகள் தேவைப்படும். தற்போதைய சூழலில் ஏஐ காரணமாக வேலைவாய்ப்பு அதிகரிக்கவே செய்யும். நாம் கண்ணால் பார்க்கும் போது நமக்குத் தெரியும் அனைத்து தகவல்களையும் இயந்திரத்திற்கு எடுத்துச்செல்லவே தற்போதைய தொழில்நுட்பத்தில் பல மணி நேரங்கள் வரை ஆகும்.. எனவே, ஏஐ காரணமாக வேலைவாய்ப்பு போக வாய்ப்பில்லை. அதற்குப் பல ஆண்டுகள் ஆகும்" என்று அவர் தெரிவித்தார். ஏஐ வளர்ச்சி: கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏஐ துறை அதீத வளர்ச்சியை அடைந்து வருகிறது. சாட்ஜிபிடி, மெடா ஏஐ எனத் திரும்பும் பக்கம் எல்லாம் ஏஐ தான் இருக்கிறது. இதனால் வேலையிழப்புகள் ஏற்படலாம் எனப் பலரும் சொல்லி வரும் நிலையில், அமைச்சர் பிடிஆரின் இந்த கருத்துகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Related Post