நான் நீதிபதியான போது என் தந்தை சொன்ன அந்த வார்த்தைகள்! கண்ணீர் விட்ட பி.வி.நாகரத்னா! நெகிழ்ச்சி!

post-img
பெங்களூர்: நீதிபதிகள் எப்போதும் விசாரணைக்குள்பட்டவர்கள் என தனது தந்தையும் முன்னாள் தலைமை நீதிபதியுமான வெங்கட்ராமையா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா கண்ணீர் மல்க உருக்கமாக தெரிவித்தது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் இ.எஸ்.வெங்கட்ராமையா. இவர் ஓய்வுக்கு பிறகு கர்நாடா மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியில் சட்டம் பயின்ற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தார். அவர் இறந்த நிலையில் அவருடைய நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடும் வையில் பெங்களூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவருடைய மகள் நீதிபதி நாகரத்னா கலந்து கொண்டார். இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற சாதனையை வருங்காலத்தில் படைக்க போகிறார். அந்த பதவிக்கான பணிமூப்பு வரிசையில் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகரத்னா கண்ணீருடன் கூறுகையில், "என் தந்தையின் பன்முக ஆளுமை தன்மையை சிறுவயது முதலே நான் பார்த்து வந்தேன். அவரின் ஆளுமையில் வலிமையை கண்டேன். ஒரு நல்ல காரணத்திற்காக போராடுவது மிகுந்த பலனை அளிக்கும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியது. என் தந்தையின் பணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு தாய் பத்மா உறுதுணையாக இருந்தார். அவர் பொறுமையின் சிகரம். எனது தந்தையின் கடின உழைப்புக்கு எப்போதும் அவர் துணையாக இருந்தார். நான் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற போது ஒரு நீதிபதி எப்போதும் விசாரணைக்குள்பட்டவர். என் பதவிக்காலத்தின் முடிவில் நான் கவுரவமாக விடுவிக்கப்படுவேன் என என் தந்தை என்னிடம் இன்றும் சொன்னது நினைவில் உள்ளது. 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து இந்திய வழக்கறிஞர் மாநாடு நாக்பூரில் நடந்தது. பெங்களூரில் இருந்து நாக்பூர் செல்வதற்கு நேரடி ரயில் ஏதும் இல்லாததால் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை பிடிக்க சென்னை சென்ற போது அங்குள்ள பெட்டியில் சில வழக்கறிஞர்களும் பெங்களூரில் இருந்து வந்திருந்தனர். அப்போது ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டினர். 43 ஆண்டுகள் கழித்து அதாவது 1989 ஆம் ஆண்டு அந்த ரயில் பெட்டியில் நட்பு பாராட்டிய வழக்கறிஞர்களில் இருவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துக் கொண்டனர். ஒருவர் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இ.எஸ்.வெங்கட்ராமையா ஆகியோர் ஆவார். நாக்பூர் ரயில் பயணம் குறித்து என் தந்தை, குடியரசுத் தலைவரிடம் நினைவு கூர்ந்த போது அவரும் சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் என நாகரத்னா பெருமிதம் பொங்க தெரிவித்தார். மேலும் தனது தாய், தந்தை குறித்து கூறிய போது மிகவும் உருக்கமாகவே காணப்பட்டார். பேசி முடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்த போது கண்களை துடைத்தவாறே வந்து அமர்ந்தார்.

Related Post