தீவிரவாதியை தியாகிபோல புகழ்வதா.. தமிழ்நாடு எங்கபோகுது – சி.பி.ராதாகிருஷ்ணன்

post-img
கோவை: கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா இறுதி ஊர்வலத்தில் சீமான், வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதகிருஷ்ணன், "ஒரு தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம், தமிழக அரசு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை பாராட்டுகிறதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அல் உம்மா அமைப்புத் தலைவரும், 1998 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பாஷா நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்தனர். சீமான், விசிக நிர்வாகி வன்னி அரசு ஆகியோர் பாஷா உடலுக்கான நேரில் அஞ்சலி செலுத்தியது சர்ச்சையாகியுள்ளது. மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்க்கு பிறகு பாரத தேசத்தில் மிகப் பெரியளவு மதிக்கப்படக் கூடிய தலைவர் அம்பேத்கர். அவரது புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்திருக்கும். இந்திய அரசியமைப்பு சட்டத்தையே தந்தவர் அம்பேத்கர். அதனால் தான் இந்திரா காந்தியால் ஜனநாயகத்தை அசைத்து பார்க்க முடியவில்லை. அவரது புகழுக்கு ஒருபோதும் களங்கம் ஏற்படுத்தக் கூடாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தால் மாநிலத்தின் உரிமை பறிபோகவில்லை. அப்படி உரிமை பறிபோகிறது என்றால் கருணாநிதி 1971 ஆம் ஆண்டு சட்டமன்றத்தை கலைத்துவிட்டு நாடாளுமன்றத்துடன் தேர்தல் நடத்தினார். இதனால் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது கருணாநிதிக்கு தெரியாதா. மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சிலர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் இது. அடிக்கடி தேர்தல் என்பது சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும். தமிழகம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. கருணாநிதி நடவடிக்கை எடுக்க தவறியதால் தான் கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அப்படி ஒரு தீயசக்தியை தியாகி போல ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிப்பதன் மூலம், தமிழக அரசு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை பாராட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது . அந்த நபரின் இறுதி ஊர்வலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு அரசியல் தலைவர்கள் கலந்து மரியாதை செலுத்தியுள்ளனர். அவர்களை மக்கள் முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். யார் தவறு செய்தாலும் தவறுதான். குழந்தைகளை கூட கொன்று குவித்த ஒருவர் தியாகியா. அவர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவரை கொண்டாட முடியுமா. இது மிகவும் தவறு. போதைப் புழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதில் தமிழகம் விதிவிலக்கல்ல. எல்லா இடங்களிலும் ஒருமுகமாக மாநில அரசு அதிகளவு போதைப் பொருள்களை பறிமுதல் செய்யும்போது அதைப் பாராட்ட வேண்டும். அதைவிடுத்து இவ்வளவு போதைப் பொருள் இருந்ததா என்று விமர்சனம் செய்வது அழகல்ல. இவ்வளவு கண்டுபிடித்துள்ளார்கள் இதேபோல இனியும் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், முறையாக பணியாற்றும்போது அவர்களை ஆதரிக்க வேண்டும். அதேநேரத்தில் கொலையாளிகளை ஊர்வலமாக கொண்டு மரியாதையுடன் புதைக்க நினைக்கும்போது எதிர்ப்பதும் சாதாரண குடிமகனின் கடமை. சாதாரண மக்களை கொன்று குவித்து கொடுங்கோலனுக்கு எதிராக பாஜக மட்டுமாவது குரல் எழுப்புகிறதே என அவர்களை நான் பாராட்டுகிறேன்" என்றார்.

Related Post