பற்றி எரியும் சென்னை 9 மாடி கட்டடம்! கண்ணாடியை கல்வீசி உடைத்து தீயணைக்கும்

post-img

சென்னை: சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டி வரும் 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் தீ கட்டடத்தின் அனைத்து இடங்களுக்கும் பரவியது. இதனால் தீயை அணைப்பதில் கடும் சவால் உருவான நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பயன்படுத்திய யுக்தி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் என்பது வேளச்சேரி -தாம்பரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அதாவது வேளச்சேரியில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே இந்த கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.


இந்த கட்டடம் மொத்தம் 9 தளங்களை கொண்டுள்ளது. தரை தளத்துடன் சேர்த்தால் இந்த கட்டடம் என்பது 10 தளங்களாகும். தற்போது 80 சதவீத அளவிலான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று அந்த கட்டடத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.


இந்த தீ அடுத்தடுத்து ஒவ்வொரு தளங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் 9 மாடி கட்டடமும் வேகமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்து ஷாக்கான மக்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



முதலில் முதல் தளத்தில் தீயணைக்கும் பணியில் வீரர்கள் தொடங்கினர். இருப்பினும் அடுத்தடுத்த தளங்களில் தீ வேகமாக எரிந்தது. இதனை அணைப்பது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்தந்த தளத்தில் உள்ள கண்ணாடியை உடைத்து அதன் வழியே தீயணைக்க முடிவு செய்தனர்.


இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கண்ணாடிகள் மீது கல்வீசி உடைத்தனர். அதன்பிறகு ஹைலிப்ட் தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வேளச்சேரி-தாம்பரம் பிரதான சாலை என்பது முற்றிலுமாக கரும்புகை சூழ்ந்தது.


இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த தீவிபத்து என்பது மாலை நேரத்தில் ஏற்பட்டதால் அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் சிரமத்தை எதிர்கொண்டனர். வாகனம் ஓட்ட முடியாமல் அவர்கள் தவித்தனர். இதையடுத்து மாற்றுபாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. தற்போதைய சூழலில் அந்த 9 மாடி கட்டடத்தில் எப்படி தீவிபத்து ஏற்பட்டது? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றிய விசாரணையையும் போலீசார் தொடங்கி உள்ளனர்.

 

Related Post