டெல்லி: 8வது ஊதிய குழுவுக்கு இன்னும் டைம் இருக்கிறது என்ற போதிலும் இப்போதே அது குறித்த பேச்சுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே 8வது ஊதிய குழுவில் அடிப்படை குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.34,500ஆக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி அகவிலைப்படி கணக்கிடும் முறையும் கூட மாற்றப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
நமது நாடு முழுக்க உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் மத்திய அரசின் முன்னாள் ஊழியர்கள் 8வது ஊதிய குழுவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள்..
பணவீக்கம் காரணமாகச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளனர்.
ஊதிய குழு: கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட 7வது ஊதியக் குழு பரிந்துரைகள், 2026 உடன் நிறைவடைகிறது. அடுத்து 8வது ஊதிய குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000இல் இருந்து ₹34,500 ஆக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு வழக்கமாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக் குழுவை அமைகிறது. பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப மத்திய அரசின் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவது குறித்த பரிந்துரைகளை இந்த ஊதிய குழு வழங்கும். 2014ம் ஆண்டு அமைக்கப்பட்ட 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2016ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட நிலையில், அது முடிவடையும் தருவாயில் உள்ளது.
எப்போது: இதையடுத்து 8வது ஊதியக் குழு 2025ல் அமைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அதன் பரிந்துரைகள் ஜனவரி 2026ல் அதை அமல்படுத்த முடியும். அதேநேரம் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் தொழிலாளர் குழு பிரதிநிதிகளை அமைச்சரவை செயலாளர் சந்தித்தார். அப்போதே 8வது ஊதிய குழு குறித்த பேச்சு எழுந்தது. இருப்பினும், அதற்கு இன்னும் காலம் இருப்பதாக அமைச்சரவை செயலாளர் தரப்பில் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
அகவிலைப்படி கணக்கிடும் முறை: இந்த புதிய ஊதிய குழுவில் அகவிலைப்படி கணக்கிடப்படும் முறையில் மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. பணவீக்க விகிதங்களை இன்னுமே சரியாகப் பிரதிபலிக்கும் வகையில் அகவிலைப்படி கணக்கிடப்படும் முறை மாற்றி அமைக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இது 8வது ஊதியக் குழுவின் முக்கியமான மாற்றமாக இருக்கும். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியமும், அலவன்ஸ்களும் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை ஊதியம்: அதேபோல அடிப்படை சம்பளம் என்பது 7வது ஊதியக் குழுவின் போது 23% உயர்த்தப்பட்டது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு 8வது ஊதியக் குழு பரிந்துரைகளில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் கடந்த முறையைக் காட்டிலும் கூடுதலாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி நடந்தால் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பது ரூ.34,500ஆக உயரும் என்பதால் மத்திய அரசு ஊழியர்கள் இதையே பெரியளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தங்களுக்குச் சாதமாகவே இருக்கும் என்று மத்திய அரசு ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதில் குறிப்பாக அகவிலைப்படியின் கணக்கிடும் முறை மற்றும் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் உயர்த்தப்படுவது ஆகியவை அதிகரிக்கும் செலவுகளைக் கட்டுப்படுத்த தங்களுக்கு உதவும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage