சாமியார் மீது வழக்கு-உருவ பொம்மை எரிப்பு என நேரத்தை வீணடிக்க

post-img

சென்னை: சாமியார் மீது வழக்கு - உருவ பொம்மை எரிப்பு என நேரத்தை வீணடிக்க வேண்டாம் என திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்த வடமாநில சாமியாரை கண்டித்து திமுகவினர் வெகுண்டெழுந்துள்ள நிலையில், கட்சியினரை அமைதிப்படுத்தும் வகையில் அவர் இதனைக் கூறியிருக்கிறார். மேலும், சாமியார் குறித்து உதயநிதி தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;


''சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட 'முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி' என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.


இந்த நிலையில், 'கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்' என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.


உதயநிதி தலைக்கு விலை வைத்த அயோத்தி சாமியார் மீது வழக்குப்பதிவு.. வீடியோ வெளியிட்டவர் மீதும் வழக்கு!
நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன.


இவ்வளவு வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது.. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


எனக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்த தோழமை கட்சியின் தலைவர்களுக்கும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

Related Post