ஜி-20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் மாநாட்டில் தலைவர்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
ஜி-20 அமைப்புக்கு இம்முறை இந்தியா தலைமைதாங்கி உள்ளது. தெற்காசியாவில் நடத்தும் முதல் நாடு இந்தியா என்பதால் இந்த மாநாடு சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாளும் டெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகிறார் மற்றும் உறுப்புநாடுகளின் தலைவர்கள், பேரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்குபெறுகின்றனர். இதனால் டெல்லி முழிவதும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு தடபுடலான விருந்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சைவ உணவுகள் மட்டும் பரிமாறப்படும் என்றும் இந்த ஆண்டு தினை ஆண்டாக இந்தியா கடைபிடிப்பதால் தினை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான உணவு தயாரிப்பை தாஜ் ஓட்டல் ஏற்றுள்ளது. சுமார் 500 வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன, இதில் தென் இந்தியாவின் பிரபல உணவான மசால் தோசை, ராஜஸ்தானின் தால்பாடி சுர்மா, பீகாரின் லிட்டி சோக்கா, பெங்காலி ரசகுல்லா தயாரிக்கப்படுகிறது. இது தவிர பானிபூரி, சட்பதி சாட், தஹிபல்லா, சமோசா, பிரட் பகோரா, பேல்பூரி, வடபாவ் போன்ற உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. மேலும் பலவகையான இனிப்புகள், காய்கறிகள், பழங்களும் விருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தலைவர்கள் சாப்பிடுவதற்காக தங்க தட்டுகள், வெள்ளி பாத்திரங்கள், ஜாடிகள் உள்ளிட்ட 15 ஆயிரம் வெள்ளி பொருட்கள் ஜெய்ப்பூரில் இருந்து வரவைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.