சென்னை: திமுக ஆட்சியில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள் அனைவரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் பண்ருட்டி வேல்முருகன் ஒரு வாதத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகமான விஜய் கட்சி திமுகவுக்கு 2026 தேர்தலில் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும் எனப் பலரும் பேசி வந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுத்து திமுக அரசைச் சட்டமன்றத்தில் கலங்கடித்து வருகிறார் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த 4 ஆண்டுகால திமுக ஆட்சியில் தனது தொகுதியில் ஒரு திட்டம் கூட பொதுப்பணித்துறை சார்பில் நிறைவேற்றப்படவில்லை என்று வேல்முருகன் பேசியதால் அவையில் சலசலப்பு எழுந்தது. சபாநாயகர் அப்பாவு 'எதையுமே செய்யவில்லை என்று சொல்ல வேண்டாம். என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். எனவே உங்கள் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கிவிடுகிறேன்' என்று சொன்னார்.
அதைத் தொடர்ந்து வேல்முருகன் அவைக்கு வெளியே ஊடகங்களைச் சந்தித்து தனது உள்ள குமுறலைக் கொட்டித் தீர்த்தார். அதன்பின் திமுக ஆட்சியில் தனது கோரிக்கைகள் எப்படிப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்பதை வெளிப்படையாகப் போட்டு உடைத்தார்.
ஊடகங்களில் இப்போது விஜய்யின் தவெகவைவிட வேல்முருகனின் தவாக தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறது. அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "கடந்த அதிமுக ஆட்சியில் பல போராட்டங்களை ஒருங்கிணைத்து 'தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு' சார்பில் நடத்தினோம். அதில் பல கட்சிகள் பங்கேற்றனர். இந்த அமைப்பு சார்பாக முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டால் கிடைக்கவில்லை. 10.5% வன்னியர் ஒதுக்கீடு என்பதை முன்வைத்தான் நான் தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்றேன். அதைப் பற்றிப் பேச அனுமதி கேட்டால் கிடைக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒரு குழு அமைத்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்தக் குழு எங்கே போனது?
தமிழ்நாட்டில் உள்ள பெரிய சமூகமான வன்னியர்களுக்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. 38 மாவட்டங்களில் ஒரு மாவட்ட ஆட்சியர் இல்லை. மொத்தம் 20 எஸ்பியில் ஒருவர் மட்டுமே வன்னியர். இருப்பதே 2 ஐஜிதான். அவர்களைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறீர்கள். இன்னும் சொல்லப் போனால் உயர் பதவிகளில் தமிழர்களுக்கே உரிய இடம் இல்லை. கடந்த 4 ஆண்டுகளாக வட நாட்டை சேர்ந்தவர்கள்தான் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு கடந்த 10 மாதங்களாக திமுக அரசோ அமைச்சர்களோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைத்தான் எடப்பாடி கேட்டார். அது 100% சரியானது. இந்தத் திமுக ஆட்சி அதிகாரிகள் ஆட்சி நடத்துகிறார்கள். டங்ஸ்டன் வேண்டாம் என மக்கள் போராடியதால் அரசு திட்டத்தை நிறுத்தியது. பரந்தூரில் 25 கிராமங்கள் போராடி வருகின்றன. அந்த 25 கிராமமும் வன்னியர் கிராமம். பூர்வகுடி மக்கள். அவர்களின் வீடு, நிலங்கள் பறிபோகின்றன. அதில் அரசுக்கு அக்கறை இல்லையா?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனக்கு பண்ருட்டியில் 30 ஆயிரம் வாக்குகள் இருக்கின்றன என்றும் வெற்றி பெற 20 ஆயிரம் கூடுதலாகத் தேவை என்பதால்தான் கூட்டணிக்குப் போனோம் என்றும் பேசி இருக்கும் அவர் திமுக கூட்டணிக்கு தன்னை அனுப்பி வைத்ததே சீமான்தான் என்று பேசி இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.