“என்கிட்ட 5 வருசம் ஆட்சியை கொடுங்க.. மழைநீர் தேங்குனா ஆட்சியை விட்டே போறேன்”.. சவால் விட்ட சீமான்!

post-img
சென்னை: 5 ஆண்டுகள் என்னிடம் ஆட்சியை கொடுங்கள்; அதன்பிறகு எங்காவது மழைநீர் தேங்கினால் ஆட்சியை விட்டு போகிறேன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு உதவுவது என்பது ஆட்சியாளர்களின் கடமை. இங்கு மக்கள் அரசியல் இல்லை, கட்சி அரசியல் தேர்தல் அரசியல் தான் நடக்கிறது. ஆண்டுதோறும் பாதிப்பை சந்தித்து வருகிறோம். இயற்கைக்கு கோபம் வந்தால் வெறிகொண்டு விடும், அதனை கட்டுப்படுத்த முடியாது. இயற்கைக்கு ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்துகொள்ள வேண்டும். சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகளுக்கு முதலீடு பெற செல்கிறீர்கள். அங்கு சாலைகளில் தானே பயணிக்கிறீர்கள். அங்கு செயல்படுத்தப்படும் வடிகால் முறையை செயல்படுத்த வேண்டியதுதானே? மக்கள் வெள்ளத்தில் மிதந்தால் 2000 கொடு, 5000 கொடு என்பதெல்லாம் தீர்வு முறையா? மக்களை பேரன்பு கொண்டு காதலிக்க வேண்டும். இதெல்லாம் அடிப்படை. மழைநீர் ஓட கால்வாய் வெட்ட வக்கில்லை, மெட்ரோ எல்லாம் நாங்கள் கேட்டோமா? பள்ளிக்கரணை ஏரியை குப்பை கொட்டி மூடுகிறீர்களே.. மக்கள் ஆக்கிரமிப்பு செய்தால் இடிக்கும் நீங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சென்னையே ஒரு ஏரி நகர். ஏரியை தூற்றுவிட்டு வள்ளுவர் கோட்டத்தை கட்டி இருக்கிறீர்கள். ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடும் நீதிமன்றங்கள் ஏரியில் கட்டப்பட்டிருக்கின்றன. அப்புறம் மழைநீர் தேங்குகிறது என்றால் வராமல் என்ன செய்யும்? ஐந்து ஆண்டுகள் என்னிடம் ஆட்சியை கொடுங்கள். இந்த மாதிரி அதன்பிறகு எங்காவது மழைநீர் தேங்கினால், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு ஆட்சியை விட்டுப் போய்விடுகிறேன்" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Related Post