பெங்களூர்: பாதுகாப்புக்கென்றே பெயர்போன கார் பிராண்ட் 'வால்வோ'. பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல மீட்டர் உயரத்தில் இருந்தெல்லாம் காரை செங்குத்தாக கீழே போட்டு சோதனை நடத்தினார்கள். பல விபத்துகளிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது வால்வோ. ஆனால் இன்றைக்கு பெங்களூரில் நடந்த ஒரு விபத்தில் வால்வோ கார் நொறுங்கி உருக்குலைந்து 6 பேர் பலியாகியுள்ளனர்.
உலகளவில் பாதுகாப்பு மிக்க கார் பிராண்டுகளில் முக்கியமானது வால்வோ கார்கள். இந்தியாவில் டாடா கார்களை போன்று, வெளிநாடுகளில் வால்வோ கார்கள் ஏராளமான விபத்துகளில் இருந்து பயணிகளை காப்பாற்றி உள்ளன. கடுமையாக மோதினாலும் கூட, உள்ளே இருப்பவர்கள் உயிர் சேதமின்றி தப்பியது உண்டு.
இந்தியாவிலும் வால்வோ கார்கள், பாதுகாப்புக்கு பெயர் போனவை. நிலச்சரிவில் வால்வோ வி60 கார் ஒன்று சிக்கியது. மண் மட்டுமின்றி பாறைக் கற்களும் வால்வோ கார் மீது சரிந்து விழுந்தன. ஆனால், மண் சரிவில் இருந்து மீட்கப்பட்ட பின்பும் அந்த வால்வோ கார் தொடர்ந்து இயங்கியது அனைவருக்கும் ஆச்சர்யம் கொடுத்தது.
சில வருடங்களுக்கு முன்பு கேரளாவில் கூட ஒரு விபத்தில் வால்வோ காருக்குள் இருந்தவர் எந்தவொரு காயமும் இன்றி வெளியே வந்தார். இந்த சம்பவங்களே வால்வோ காரின் வலிமையான கட்டமைப்புக்கு உதாரணம். இதனால்தான், வால்வோ கார்களுக்கு பல்வேறு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
கார் உள்ளிட்ட வாகனங்கள் தொழிற்சாலையில் தயார் ஆனதும்'க்ராஷ் டெஸ்ட்' செய்யப்படுவது வழக்கம். காரில் ஏதாவது பாதுகாப்பு குறைபாடு உள்ளதா? நன்றாகத் தாங்குகிறதா என சோதிக்கப்படும். வால்வோ நிறுவனம் செய்யும் கிராஷ் டெஸ்ட்களே வேற ரகம். சில ஆண்டுகளுக்கு முன்பு கார்களை கிரேன் மூலம் தூக்கி, சுமார் 30 மீட்டர் உயரத்தில் இருந்து கார்கள் விடப்பட்டு எல்லாம் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது.
கடுமையான பாறைப் பகுதிக்கு கார்களைக் கொண்டு சென்று கிரேன் மூலம் அவற்றை தூக்கி சுமார் 100 அடி உயரத்தில் இருந்து கார்களை கீழே போட்டு சோதனை நடத்தியது அந்த நிறுவனம். காரின் உறுதித் தன்மை மட்டுமின்றி உடனடியாக எப்படி காரையும் அதில் சிக்கியவர்களையும் மீட்பது என்கிற சோதனையையும் வால்வோ நிறுவனம் மேற்கொண்டது.
10 வால்வோ கார்கள் அந்தரத்தில் இருந்து கிரேன்கள் மூலம் செங்குத்தாக கீழே விடப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான மாடல்களை கொண்டு சோதனை நடத்தி, பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தியது வால்வோ. அதில் இன்று விபத்துக்கு உள்ளான XC90 மாடல் வால்வோ காரும் அடக்கம்.
பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-ல் இன்று காலை டிரக் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரக்கை ஒட்டி பக்கவாட்டில் வால்வோ கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் 6 பேர் பயணித்துள்ளனர். கண்டெய்னர் லாரியும் டிரக்கும் ஒரே சீராக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த டிரக் பக்கவாட்டில் சரிந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் வால்வோ கார் மீது கண்டெய்னர் விழுந்தது.
பல டன் எடை கொண்ட கண்டெய்னர் விழுந்ததில் வால்வோ கார் அப்பளம் போல நசுங்கியது. இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ந்து போய் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியை முடுக்கிவிட்டனர். கண்டெய்னருக்கு அடியில் இருந்த காரை மீட்க முடியாத நிலை இருந்ததால் கிரேன் உதவியுடன் கண்டெய்னரை தூக்கினர்.
காரின் மேற்பகுதி முற்றிலுமாக நசுங்கிவிட்டது. அதன்பிறகு காருக்குள் பார்த்தபோது, அந்த காரில் பயணம் செய்த 6 பேரும் பலியான நிலையில் இருந்தனர். 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 6 பேர் காரில் இருந்த நிலையில், அவர்கள் 6 பேருமே பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரக்கின் முன்னால் திடீரென்று இரண்டு கார்கள் வந்ததால் விபத்தை தவிர்க்க டிரைவர், டிரக்கை வலது பக்கமாக திருப்பியதாகவும் இதில் கட்டுப்பாட்டை இழந்த டிரக் கவிழ்ந்து, கார் மீது விழுந்து இந்த கோர விபத்து நடந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த வால்வோ XC90 மாடல் காரில் சென்றவர்கள் ஒரு தொழிலதிபரின் குடும்பத்தினர் என்று தெரியவந்துள்ளது. விபத்தில் வால்வோ கார் உருக்குலைந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பாதுகாப்புக்கு பெயர்போன வால்வோ கார் உருக்குலைந்தது குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.