தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் அறிமுகமானவர் கமல்ஹாசன். போடாத கெட்டப்புகள் இல்லை, பண்ணாத கதை களங்கள் இல்லை எனும் அளவுக்கு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குநர், தயாரிப்பாளர், மேக்கப் கலைஞர் என சினிமாவின் சகலகலா வல்லவன் இவர்.
இந்திய சினிமாவில் பல பதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். சினிமாவுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தவர். கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா கடந்த 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியானது. அதாவது கமல்ஹாசன் நடிகராக 64வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து 64 years of Kamal Haasan என்ற ஹேஷ்டேக் உருவாக்கி காமன் டிபி வெளியிட்டு ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக. உங்கள் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.