பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது. 2019 ஆம் ஆண்டு கொரானா பரவலுக்கு பிறகு நேரில் நடைபெறும் முதல் பிரிக்ஸ் உச்சி மாநாடு இதுவாகும். இதனை முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது.
பல்வேறு சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றார். வாட்டர்க்லூப் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடியை தென் ஆப்பிரிக்காவின் துணை அதிபர் பால் மஷாடைல் நேரில் சென்று வரவேற்றார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, "சற்று முன் ஜொஹன்னஸ்பெர்கில் தரையிறங்கினேன். அடுத்த சில நாட்கள் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உலக தலைவர்களுடன் நிறைய சந்திப்புகள், ஆலோசனைகளில் ஈடுபட உள்ளேன்." என்று குறிப்பிட்டார்.
இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "பிரதமர் நரேந்திர மோடி தென்னாப்பிரிக்காவின் வாட்டர்க்லூப் விமானப் படை தளத்தில் தரையிறங்கினார். அவரை தென்னாப்பிரிக்க துணை அதிபர் பால் மஷாடைல் வரவேற்றார்.
3 நாள் பயணமாக தென்னாப்பிரிக்கா சென்று உள்ள பிரதமர் நரேந்திர மோடி 15 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளார். இதில் உலக நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. பல தரப்பு ஆலோசனைகளும் நடக்க உள்ளன." என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜொஹன்னஸ்பெர்கில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் இடத்தில் உள்ள சாண்டன் சன் ஹோட்டலில் தங்குகிறார். இதற்காக அங்கு சென்ற பிரதமர் மோடியை காண ஏராளமான தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள் அங்கு திரண்டனர். அங்கு வந்த புலம்பெயர் இந்தியர்கள் அமைப்பின் உறுப்பினர்களை அவர் சந்தித்தார்.
அப்போது இந்தியர்கள் "வந்தே மாதரம்" என முழக்கமிட்டதை கண்டு அவர் நெகிழ்ந்தார். அங்கிருந்த புலம்பெயர் இந்திய பெண் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியை பார்க்க வந்தது பெருமையளிக்கிறது. அவர் மிகவும் சிறப்பான மனிதர். அவர் என்னுடைய ஹீரோ" என்று கூறினார்.