வாஷிங்டன்: அமெரிக்கா அதிபராகத் தேர்வாகியுள்ள டிரம்ப் ஆதரவுடன் புதிதாக ஒரு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், சொந்த கட்சியினரே டிரம்பிற்கு எதிராகத் திரும்பியதால் அந்த மசோதா நிறைவேறவில்லை. இதன் காரணமாக அமெரிக்கா நாளை முதல் ஷட் டவுன் ஆகும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக எந்தவொரு நாடாக இருந்தாலும் கடன் என்பது முக்கியமானதாக இருக்கும். அனைத்து நாட்டு அரசுகளும் கடன் வாங்கும்.. அதற்கு எந்தவொரு நாடும் விதிவிலக்கு இல்லை.
இந்தியாவில் இதுபோல அரசு கடன் வாங்க எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் அதுபோல இல்லை. கடன் வாங்குவது தொடர்பான மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, ஒப்புதல் பெற்றால் மட்டுமே கடன் வாங்க முடியும். இல்லையென்றால் அதிபரே நினைத்தாலும் கடன் வாங்க முடியாது.
இதற்கிடையே செலவினங்கள் தொடர்பாக டிரம்ப் ஆதரவுடன் ஒரு மசோதா அமெரிக்காவின் கீழ் சபையாகக் கருதப்படும் பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்டது. அடுத்த மாதம் ஜன. 20ம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் நிலையில், முதல் இரண்டு ஆண்டுகள் டிரம்ப் நிர்வாகம் கூடுதலாகக் கடன் வாங்குவதை அனுமதிக்கும் வகையில் இந்த மசோதா இருந்தது.
டரம்ப் ஆதரவுடனேயே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், அதற்கு உட்கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொதுவாக நமது நாட்டில் நாடாளுமன்றம் அல்லது சட்டசபையில் ஒரு மசோதா கொண்டு வரப்படுகிறது என்றால் ஆளும் தரப்பு எம்பிக்கள் கொறடா உத்தரவின்படி அதற்கு ஆதரவாகவே வாக்களிக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் அப்படியெல்லாம் இல்லை. எம்பிக்கள் விருப்பம் போல வாக்களிக்கலாம்.
அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று குடியரசு கட்சியினர் சொல்லி வரும் நிலையில், கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்கும் மசோதாவை டிரம்ப் தரப்பு கொண்டு வந்தது அங்கு அவரது சொந்த கட்சி எம்பிக்கள் பலருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் குடியரசு கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பலருமே கூட இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 174 வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், 235 வாக்குகள் இதற்கு எதிராகவே வாக்களித்தனர். இதன் மூலம் அமெரிக்க அரசு ஷட் டவுன் எனப்படும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இருக்கும் நிதியைக் கொண்டு இன்று டிச. 20ம் தேதி வரை மட்டுமே அமெரிக்க அரசால் செயல்பட முடியும்.
கூடுதல் கடன் பெறுவது தொடர்பான மசோதா தோல்வி அடைந்துள்ளதால், இனி அமெரிக்காவில் கடன் பெற முடியாது. தீர்வு எட்டப்படவில்லை என்றால் அடுத்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க அரசு முடங்கும். இதனால் அமெரிக்க பெடரல் ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதாவது நிதி இல்லாததால் அமெரிக்க பெடரல் ஊழியர்கள் பணியாற்றினாலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. இதனால் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள்.
போலீஸ், விமான பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வேலை செய்யும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான அதிதாயவசிய ஊழியர்கள் ஊதியமில்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு அரசுத் திட்டங்கள் பாதிக்கப்படும் என்பதால் அங்குள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பத்தினர் இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.