பாக்தாத்: சமீபத்தில் ஜோர்டன் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஆதரவு போராளிகள் ட்ரோன் தாக்குதலை தொடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடியாக அமெரிக்கா சக்திவாய்ந்த போர் விமானம் மூலம் ஈராக் மற்றும் சிரியா மீது குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தை மீட்க போரில் ஈடுபடுவதாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில், தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஹஹமாலை அழிக்கும் வரை போர் ஓயாது என இஸ்ரேல் கூறியுள்ளது. எனவே காசாவில் நாள்தோறும் பெண்களும், குழந்தைகளும் குண்டு வீச்சில் பலியாகி வருகின்றனர்.
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 27-ஐ கடந்திருக்கிறது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் கிளர்ச்சி படைகள் களத்தில் இறங்கியுள்ளன. மத்திய தரைக்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதால் கடல் வணிகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து, இந்த வணிக பாதையை மீட்க முயன்று வருகின்றன.
அதேபோல, ஈராக்கில் உள்ள இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தலைமை அலுவலகம் மீதும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவ நிலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈராக் எல்லையையொட்டிய ஜோா்டானின் ருக்பான் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ தளம் அமைந்துள்ளது. 'டவா் 22’ என்றழைக்கப்படும் அந்த தளத்தில் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம் கடந்த மாதம் 28ம் தேதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த 3 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர், 34 போ் காயமடைந்தனர். இச்சம்பவம் அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட 'இஸ்லாமிய போர்ப்படை' மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த கிளர்ச்சி குழுக்களின் தளம் ஈராக்கிலும் சிரியாவிலும் அமைந்திருக்கிறது. எனவே அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஈராக் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
ஈராக் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “அமெரிக்காவின் தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை பாதித்திருக்கிறது. இது எங்களை குறைமதிப்பிடுவதை போன்று இருக்கிறது. இதற்கான விளைவுகள் மோசமாக இருக்கும்” என எச்சரித்திருக்கிறார். மறுபுறம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “நாங்கள் மத்திய கிழக்கில் போரை விரும்பவில்லை. ஆனால், அமெரிக்கர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் அதற்கு நாங்கள் பதிலளிப்போம்” என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பதற்ற நிலை நீடித்து வருகிறது. இப்போது அமெரிக்க நடத்திய தாக்குதல் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.