பாலத்துக்கு அஞ்சலி.. பக்கா ஐடியாவோடு வந்த பாஜகவினரை விரட்டி விரட்டி பிடித்த தூத்துக்குடி போலீசார்

post-img
தூத்துக்குடி: கனமழை வெள்ளத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் ஆற்றுப் பாலம் சேதமடைந்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில், இன்று அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை விரட்டி விரட்டி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையின் முக்கிய போக்குவரத்து நடைபெறும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள பழைய பாலம் 70 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்தப் பாலம் சிறியதாக இருந்ததாலும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதாலும், அதன் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய பாலம் கட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இந்த புதிய பாலத்தின் நடுப்பகுதியின் தூண் 2 அடிகள் இறங்கியது. இதன் காரணமாக தற்போது போக்குவரத்து நடைபெறாமல், அதோடு எந்தவித பணியும் நடைபெறாமல் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது பழைய சின்ன பாலத்திலேயே இருபுறமும் போக்குவரத்து நடைபெறுவதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. சில நேரங்களில் எதிரேதிரே இரண்டு வாகனங்கள் வரும்போது ஒரு வாகனம் நின்று ஒன்றுக்கொன்று விலகி தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் பாதசாரிகளும் அந்த சிறிய பாலத்திலேயே செல்லவேண்டி உள்ளது. இதனால் விபத்து நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் சேதமடைந்த உயர்மட்ட பாலத்தின் அபாய நிலையை உணராமல் ஆட்டோ, கார், பைக் போன்ற வாகனங்களில் பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரிய அபாயம் ஏதும் நிகழும் முன் இந்த பாலத்தில் போக்குவரத்தை தடை செய்வதோடு, போர்கால அடிப்படையில் புதிய பாலத்தை சீர்செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு அண்மையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், அங்கு பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வடக்கு ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப் பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலத்தை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது. இந்நிலையில், புதிய பாலம் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்து 1 ஆண்டு ஆகும் நிலையில், இன்னும் பாலம் சீர்செய்யப்படாததைக் கண்டிக்கும் வகையில் பாஜகவினர், இன்று அந்தப் பாலத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதற்காக திட்டமிட்டனர். பாஜகவினர் இன்று பாலத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டத்திற்கு அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அனுமதியின்றி பாஜகவினர் அஞ்சலி செலுத்த வந்ததால், போலீசார் மற்றும் பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அஞ்சலி செலுத்த வந்த பாஜகவினரை போலீசார் விரட்டி விரட்டி பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாலையுடன் அஞ்சலி செலுத்தச் சென்ற பாஜக தொண்டர் ஒருவரை போலீசார் விரட்டிப் பிடித்து மாலையைக் கைப்பற்றினர். தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Post