செலவழிக்க தெரியலையாம்.. சாக்கு பையில் ரூ.2.25 கோடி கட்டிவைத்த கோவை லாட்டரி வியாபாரி.. சிக்கினார்

post-img
கோவை: கோவையில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்ததாக வந்த புகாரை தொடர்ந்து லாட்டரி வியாபாரி நாகராஜ் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. மொத்தம் 2.25 கோடி ரொக்கத்தை கைப்பற்றிய போலீசார் நாகராஜை கைது செய்தனர். இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் அவர் சாக்குமூட்டையில் கட்டி வைத்து இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பி பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை இழப்பதால் தான் தடை கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் கூட அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை நடைமுறையில் உள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த பலரும் கேரளா சென்று லாட்டரி வாங்கி பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக கேரள எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோவை உள்பட அதனை சுற்றிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கேரளா லாட்டரி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர கேரளா லாட்டரியை பலரும் வாங்கி வந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்கின்றனர். இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் சட்டவிரோத லாட்டரி விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, பாலாஜி நகரின் சென்னியாண்டவர் கோவில் தெருவில் வசிக்கும் நாகராஜ் ( வயது 42) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். நாகராஜ் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தனது தாயுடன் வசித்து வருவதோடு, கேரளாவில் உள்ள லாட்டரி கடையில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இவர் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்தது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது வீட்டில் அனைத்து இடங்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் இருந்த சாக்குப்பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. மொத்தம் ரூ.2.25 கோடிக்கு பணம் இருப்பது தெரியவந்தது. ரொக்கப்பணத்தில் ரூ.2 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் நோட்டுக்கட்டுகள் இருந்தன. அதேபோல் பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தன. இந்த பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தெரியாமல் அவர் சாக்குமூட்டையில் கட்டி வைத்து இருந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த பணம் பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதோடு 1,000க்கும் அதிகமான லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Post