மத்திய பிரதேசத்தில் 52 கிலோ தங்கம், 10 கோடி பணம் சிக்கிய வழக்கில் திருப்பம்.. கார் ஓனர் இவரா?

post-img
போபால் : மத்திய பிரதேசத்தில் அனாதையாக நின்ற காரில் 52 கிலோ தங்கம், ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அந்த கார் யாருக்கு சொந்தம் என்பது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 3 கட்டுமான நிறுவனங்களில் தொடர்புடைய 48 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இந்த சூழலில் தங்கம் மற்றும் பணத்துடன் சிக்கிய கார், குவாலியரைச் சேர்ந்த சந்தன் சிங் கௌர் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் போபால் அருகே ரதிபாத் பகுதியில் உள்ள மெண்டோரி காட்டில் நேற்று முன்தினம் இரவு கைவிடப்பட்ட நிலையில் வெள்ளை நிற கார் ஒன்று அனாதையாக நின்றது. கடந்த சில நாட்களாகவே அந்த கார் அங்கேயே நின்று கொண்டே இருந்ததால், சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தியதில் காரில் இருந்த பைகள், பெட்டிகளில் தங்க கட்டிகள், ரொக்கப்பணம் கட்டுகட்டாக இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தார்கள். வருமான அதிகாரிகள் அவற்றை முழுவதுமாக சோதனையிட்டதில், மொத்தம் 52 கிலோ தங்கம், ரூ.10 கோடி ரொக்கம் இருந்தது. தங்கத்தின் மதிப்பு மட்டுமே சுமார் ரூ.52 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிரவித்தனர். காருக்குள் இவ்வளவு தங்கம், பணத்தை யார் வைத்து சென்றது? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னரே, கைப்பற்றப்பட்ட கார், தங்கம், பணம் ஆகியவை யாருக்கு சொந்தமானது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்பது தெரியவரும் என போலீசார் நேற்று தெரிவித்தனர். இதுஒருபுறம் எனில், நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 3 கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஐடி துறை தொடர்புடைய 48 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதேபோல் லோக் ஆயுக்தா அதிகாரிகளும் சோதனை நடத்தினார்கள். போபாலில் போக்குவரத்து துறை காவலராக இருந்து ரியல் எஸ்டேட் தொழிலதிபராகமாறிய சவுரப் சர்மாவிற்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சவுரப் சர்மாவிற்கு சில முன்னாள் அதிகாரிகள் மற்றும் போலீசார் உட்பட, மாநிலத்தில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தங்க நகைகள் மற்றும் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட 'ஆர்டிஓ' என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வெள்ளை நிற எம்யூவி கார் குவாலியரைச் சேர்ந்த சந்தன் சிங் கவுர் என்பவருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கார் குவாலியர் மாவட்டத்தின் பதிவு எண்ணைக் கொண்டிருக்கிறது. சந்தன் சிங் கவுர் கடந்த நான்கு ஆண்டுகளாக போபாலில் வசித்து வருகிறார். சந்தன் சிங் கவுர் சோதனையில் சிக்கிய நிலையில் தான், அவரது காரில் தங்கம் பணம் கைப்பற்றப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது தொடர்பாக போபால் மாநகர காவல் ஆணையர் பிரியங்கா சுக்லா கூறுகையில், "வியாழன் நள்ளிரவில் குஷல்புரா நோக்கிச் செல்லும் சாலையில் ஒருகார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. எங்கள் குழுவினர் அங்கு சென்றபோது, வாகனத்திற்குள் ஏழு-எட்டு பைகள் இருப்பதைக் கண்டார்கள். அப்போது தான் வருமான வரித்துறை மற்றும் லோக் ஆயுக்தா சோதனை நடவடிக்கைகளுக்கு பயந்து யாரோ ஒருவர் தங்கள் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து தகவல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது, அதன்பிறகு அவர்களது குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தில் இருந்த பைகளை வெளியே எடுத்தனர். பைகளில் 52 கிலோ தங்கமும், 9.86 கோடி ரூபாய் ரொக்கமும் இருந்தது"இவ்வாறு கூறினார்.

Related Post