கம்பாலா: உகாண்டாவில் உடலில் கடும் நடுக்கத்தை ஏற்படுத்தி நடனம் ஆடுவது போல இயங்க வைக்கும் 'டிங்கா டிங்கா' என்ற வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை குறி வைத்தே இந்த வைரஸ் தாக்குவதாக கூறப்படுகிறது. நோய் பாதிக்கப்பட்டவர்கள் நடனம் ஆடுவது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் டைத்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளையும் கதிகலங்க செய்தது.
மருத்துவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்திலிருந்து உலகம் மெல்ல விடுபட்டது. அதனைத் தொடர்ந்து குரங்கு அம்மை வைரஸ் உள்ளிட்ட பல வைரஸ்கள் உலகை அவ்வப்போது மிரட்டி வருகின்றன.
இந்த நிலையில் பெண்களை குறி வைத்து உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி நடனம் ஆடுவது போல தோன்ற செய்யும் டிங்கா டிங்கா என்ற வைரஸ் தற்போது உகாண்டாவில் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து இந்த வைரஸ் தாக்குவது தெரிய வந்திருக்கிறது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் நடுக்கம் ஏற்படும். இதனால் அவர்கள் நடனம் ஆடுவது போன்றே இருக்கும்.
உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்டோருக்கு டிங்கா டிங்கா வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருப்பது போல் தோன்றும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சலும் அதிகமான உடல் நடுக்கமும் ஏற்படும். தொடர்ந்து நடப்பது கூட கடினமாக இருக்கும்.
ஆனால் வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வாரத்திலேயே குணமடைந்து விடுவார்கள். சாதாரண ஆண்டிபயடிக் மருந்துகளே இந்த வைரஸுக்கு எதிராக சிறப்பாகச் செயலாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். அதே நடனம் ஆடுவது போன்ற இயக்கம் வருவதற்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவ, அறிவியல் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் டிங்கா டிங்கா வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
“Mbu”
New sickness storms schools
It's not a dance but an undiagnosed illness called dinga dinga.
Some cases were recently reported in Bundibuyo pic.twitter.com/mjMU3wiDIM
இந்நிலையில் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி அப்பகுதி மக்கள் மூலிகை மருத்துவத்தையே அதிகமாக நம்பி இருக்கும் நிலையில் மருத்துவ நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். காய்ச்சல் உடல் நடுக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டாலும் இந்த நோய் பாதித்தவர்கள் உயிரிழப்பு என்ற நிலைக்கு செல்வது இல்லை. இதனால் பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை என கூறும் நிபுணர்கள், உகாண்டா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் சமீபத்தில் பயணம் மேற்கொண்டோர் கவனமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1518 ஆம் ஆண்டு பிரான்சில் டான்சிங் பிளேக் எனப்படும் மர்ம நோய் பரவியது அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடு இன்றி ஆடிக்கொண்டே இருப்பார்களா தற்போது அதேபோன்ற நோய் பரவி வரும் நிலையில் அதுதான் நோயாக இருக்குமோ என அச்சம் எழுந்துள்ளது.