ரியல் ‘சதுரங்க வேட்டை’.. பக்கா ப்ளான் போட்ருக்காங்க பாருங்க! உடல் வெந்துடும்.. கையில் என்ன கருப்பா?

post-img
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், ரூ.9லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக்கொண்டு இரிடியம் என கூறி பித்தளை செம்பை வண்ணம் பூசி கொடுத்து மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார் (வயது 56). அவருடைய நண்பரான அருண்குமார் என்பவரின் மூலமாக தேனியில் இருந்து குமார் என்ற பெயரைச் சொல்லி ஒரு நபர் தொடர்பு கொண்டு உள்ளார். தன்னிடம் விலை மதிக்க முடியாத இரிடியம் உள்ளதாகவும் அதனை வாங்கி வெளியில் விற்றால் ரூ.5 கோடி வரை வருமானம் பார்க்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரிடியம் மோசடி: ஜஸ்டின் ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட மற்றொரு நபரான ராஜேஷ் என்பவர் உங்களிடம் இரிடியம் இருந்தால் கொண்டு வாருங்கள் ரூ.5 கோடி வரை நான் விற்பனை செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜஸ்டின் ஜெயக்குமார் மீண்டும் குமாரை தொடர்பு கொண்டு இரிடியம் கேட்ட ராஜேஷ் குறித்து கூறியுள்ளார். உடனடியாக குமார் இரிடியம் வாங்குவதற்கு ரூ 10 லட்சம் கொண்டு வந்தால் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். சிக்கிய இளைஞர்: அதற்கு ஜஸ்டின் ஜெயக்குமார் தன்னிடம் ரூ.9 லட்சம் மட்டுமே உள்ளதாகவும், தன்னுடைய நண்பரிடம் ரூ.50 ஆயிரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து குமார் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்தை கொண்டு வரும்படியும், மீதி பணம் நானே போட்டு இரிடியத்தை வாங்கி வெளியே விற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பணம் மோசடி: குமாரின் பேச்சை நம்பி ஜஸ்டின் ஜெயக்குமார் தனது நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் இரண்டு கார்களில் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். ஆண்டிபட்டியை அடுத்துள்ள க.விலக்கு பகுதியில் நின்றிருந்த குமாரை சந்தித்து ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். அந்த பணத்தை வாங்கிக் கொண்டு இரிடியம் வாங்கி வருவதாக சென்ற குமார் சிறிது நேரத்தில் ஒரு பெட்டியுடன் வந்துள்ளார்.அதே நேரத்தில் ராஜேஷ் என்பவரும் அங்கு வந்து சேர்ந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த தகவல்: அந்த பெட்டியை திறந்து பார்த்த ராஜேஷ் இது இரிடியம் தான் என உறுதி செய்து கொண்டு, பெட்டியுடன் மதுரைக்கு வாருங்கள் எனது கம்பெனியில் வைத்து பேசி விற்பனை செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரையை நோக்கி புறப்பட்டனர். இதற்கிடையே இந்த இரிடியம் மோசடி குறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு கார்களில் பெட்டியுடன் வந்த ஒரு பெண் உள்பட ஏழு பேரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் இரிடியம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தப்பிய நபர்கள்: 7 பேர் போலீசில் பிடிபட்டதை கண்டவுடன், பின்னால் வந்த இரண்டு கார்களில் வந்த குமார் மற்றும் ராஜேஷ் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 7 பேரையும் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்தையும் வாக்குமூலமாக கூறினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த பெட்டியை திறந்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது பெட்டியை முறைப்படி திறக்காவிட்டால் உடல் வெந்துவிடும், உடல் பாகங்கள் செயலிழக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பித்தளை செம்பு: இதனால் சற்றே பயந்த போலீசார் நீண்ட நேரம் ஆலோசனைக்கு பின்னர். அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்தனர். அந்தப் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கருப்பு வண்ணம் பூசப்பட்ட ஒரு செம்பு இருந்தது. அந்த செம்பை சோதனை செய்தபோது அது சாதாரண பித்தளை செம்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களிடம் இரிடியம் என்று விற்பனை செய்த குமார் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து மோசடி செய்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணை: இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜஸ்டின் ஜெயக்குமார், முகவரி தெரியாத குமார் மற்றும் ராஜேஷ் மீது க.விலக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கண்ட குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர். பித்தளை செம்பை வண்ணம் பூசி இரிடியம் என கூறி ரூ.9லட்சத்து 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Post