டெல்அவிவ்: காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படும் வரை தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல், ஹவுதி படைக்கு கடும் எச்சரிக்கையை செய்துள்ளது. இதனால் தற்போது இஸ்ரேல் - ஹவுதி படை இடையே மோதல் அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போர் ஓராண்டை கடந்து நடந்து வருகிறது. இந்த போருக்கு ஈரான் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தனது ஆதரவு ஆயுதகுழுக்களை வைத்து தாக்குதல் நடத்தியது. அந்த வகையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹெஸ்புல்லா, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து கொன்றது. அதன்பிறகு காசாவில் வைத்து ஹமாஸின் இன்னொரு தலைவர் சின்வார் கொல்லப்பட்டார். மேலும் ஹெஸ்புல்லாவின் நஸ்ரல்லாவும் வான்வெளி தாக்குதலில் லெபனானில் வைத்து கொல்லப்பட்டார்.
இதனால் ஹமாஸ், ஹெஸ்புல்லா அமைப்புகள் சிதைந்துள்ளன. இது இஸ்ரேலுக்கு வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு, ஈரான் குடைச்சல் கொடுக்க தொடங்கி உள்ளது. தற்போது ஈரான் தனது ஆதரவு பெற்ற ஹவுதி ஆயுதக்குழுக்களை இஸ்ரேலுக்கு எதிராக களமிறக்கி உள்ளது. இந்த ஹவுதிகள் ஏமனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.
செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அதுமட்டுமின்றி இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலையும் ஹவுதிகள் தொடங்கி உள்ளன. 3 நாட்களுக்கு முன்பு ஹவுதிகள் நடத்திய ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் தலைநகர் டெல்அலிவ்வை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் வரை காயமடைந்தனர்.
இந்த தாக்குதலால் ஹவுதிகள் மீது இஸ்ரேல் கடும் கோபமடைந்துள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சார்பில் ஹவுதி ஆயுதக்குழுவுக்கு கடும் எச்சரிக்கை செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: இப்போது ஹவுதி பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகனை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தவறின் தொடக்கத்திலேயே நான் ஒரு மெசேஜை கூறி கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரானின் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் உற்பத்தி சார்ந்த சிஸ்டம்களை சிதைத்துள்ளோம்.
சிரியாவில் நடந்த அதிபர் அசாத்தின் ஆட்சியை கவிழ்த்துள்ளோம். தீமை விளைவிக்கும் தீயசக்திகளுக்கு எதிராக நாங்கள் கடும் அடியை கொடுத்துள்ளோம். ஏமனில் உள்ள ஹவுதியையும் சமாளிப்போம். ஹமாஸ், ஹெஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி கடைசியாக வந்துள்ளது. எங்களின் உள்கட்டமைப்பை சிதைக்கும் நபர்களின் தலையை துண்டிப்போம். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் காசா தலைவர் இஸ்மாயில் ஹனியே, காசாவில் சின்வார், லெபானில் வைத்து ஹெஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவை கொன்றது போல் ஹவுதியையும் விடமாட்டோம். ஏமனின் ஹொடைடா மற்றும் சனாவில் வைத்து காலி செய்வோம்'' என்றார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வைத்து கடந்த ஜுலை மாதம் ஹமாஸ் தலைநகர் இஸ்மாயில் ஹனியே கொலை செய்யப்பட்டார். ஈரானின் புதிய பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அவர் சென்றபோது இஸ்ரேலின் மோசாட் உளவு அமைப்பு அவரை கொன்றதாக கூறப்பட்டது. ஆனால் இஸ்ரேல் தரப்பில் அதுபற்றி எந்த விளக்கமும் தரப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், இஸ்மாயில் ஹனியே கொன்றதை ஒப்புக்கொண்டு ஹவுதிக்கு வார்னிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.