சென்னை: உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் மேல்முறையீடு செய்துவரும்நிலையில், சில சிக்கல்கள் ஆங்காங்கே முளைத்து வருகின்றன.
உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்தும், 57 லட்சம் பேருக்கு ரூ.1000 உரிமைத்தொகை மறுக்கப்பட்டுள்ளது.. என்ன காரணத்துக்காக உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்த மெசேஜ்கள், அவரவர் செல்போன்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
மேல் முறையீடு: அதில் பெரும்பாலும், கார் வைத்திருப்பது, சொத்து அதிகம் இருப்பது, கரண்ட் பில் அதிகமாக வந்திருப்பதை காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. எனினும், 1000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது..
மேல்முறையீடு செய்யலாம், அதுவும் இ-சேவை மையம் வழியாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்து வருகிறார்கள் ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் பெண்கள் கூட்டம் அலை மோத தொடங்கிவிட்டதாம்.. இ-சேவை மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன்பே, பெண்கள் வந்து காத்திருக்க துவங்கிவிட்டனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை ஆர்டிஓ ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று அரசு கூறியிருக்கிறது.. எனினும், இ-சேவை மையங்கள், தனியார் இ-சேவை மையங்கள், இண்டர்நெட் மையங்களிலும் பெண்கள் கூட்டம் பெருகி கொண்டிருக்கிறது. இதனால், தள்ளுமுள்ளும் சில இடங்களில் ஏற்படுகிறது..
தள்ளுமுள்ளு: மணலி மண்டல அலுவலகத்தில் இப்படித்தான் பெண்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கதவு கண்ணாடி டமார் என உடைந்து நொறுங்கியதுடன், அந்த மையத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மற்ற பொருட்களும் கீழே விழுந்து உடைந்துவிட்டது... இ-சேவை மைய ஊழியர் கீதா என்பவர், பெண்கள் கூட்டத்தில் வசமாக சிக்கி கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார்.. பிறகு அவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்..
கள ஆய்வுகள்: ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றுடன் இ-சேவை மையத்தில் குவிந்து வருகிறார்கள்.. விண்ணப்பங்களை தேர்வு செய்ய அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரிக்க தேவையான ஊழியர்களை தாசில்தார் ஏற்பாடு செய்து வருகிறார். தகுதியான பயனாளிகள் கிடைத்ததுமே, அவர்கள் உரிமைத் தொகை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளார்களாம்.