சென்னை: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், விஜய் - திருமா கூட்டணி அமையப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன.. இதையடுத்து, அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை என திருமாவளவன் அறிவித்துவிட்டார். எனினும், இன்று நடக்க போகும் விழாவின் பின்னணி குறித்து பல்வேறு தகவல்கள் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமண்ஸ் அமைப்பும், விகடன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது.
புத்தக வெளியீட்டு விழா: நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில், அனுமதி அட்டை இருப்பவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள முடியும். அதற்கேற்ப மிக ஸ்ட்ரிக்ட்டாக விழாவை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவினையும் விழாவில் பேசப்படப்போகும் பேச்சு க்களையும் உளவுத்துறை உன்னிப்பாக கவனிக்க தயாராகி வருகிறது.
குறிப்பாக விஜய்யும், ஆதவ் அர்ஜுனாவும் என்ன பேசப் போகிறார்கள் என்பதை கவனிக்க விருக்கிறது உளவுத்துறை. திமுக இளைஞரணியினரும் விழா பற்றி தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
திருமாவளவன்: அம்பேத்கர் பற்றிய இந்த நூலை நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் வெளியிட, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார். இதற்கு முன்னதாக, நூலை பெற்றுக்கொள்ளும் இடத்தில் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் இருந்தார். விஜய்யுடன் திருமாவளவன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது அரசியல் ரீதியாக சர்ச்சைகள் எழுந்தன.
அதாவது, திமுக கூட்டணியில் உள்ள திருமா, திமுகதான் எங்களின் எதிரி என சொல்லும் விஜய்யுடன் ஒரே மேடையில் இருப்பதா? என்கிற சர்ச்சைகள். அந்த சூழலில், திமுக தலைமைக் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இந்த விழாவை தவிர்த்தார் திருமாவளவன். இதனையடுத்தே, ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு இணைக்கப்பட்டார். விஜய்யுடன் ஒரே மேடையில் திருமா கலந்துகொள்ளாதது சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களுக்கு ஏக வருத்தம் தான்.
குறியீடு: "கூட்டணி அரசியலைத் தாண்டி, அம்பேத்கர் விழாவை நம் கட்சியின் கொள்கை குறியீடாக பார்க்க வேண்டும், அதனால் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்று மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
ஆனால், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான சிறுத்தைகளின் எம்.எல்.ஏ.க்களும், எம்.பி. ஒருவரும், "திமுகவின் கோபத்தை சம்பாதித்துக்கொள்ள வேண்டாம்" என திருமாவிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, திமுகவின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து விழாவை புறக்கணித்தாராம் திருமாவளவன். இப்படிப்பட்ட பின்னணியில்தான் இந்த விழா நடக்கிறது.
ஆனால், இதுகுறித்து திருமாவளவனே அளித்த விளக்கத்தில் "என்னை ஒரு கருவியாகக் கொண்டு தமிழ்நாடு அரசியல் களத்தில் அரசியல் எதிரிகள் காய் நகர்த்தப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்த பின்னர், எப்படி நான் அதற்கு இடம் கொடுக்க இயலும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதான் ட்விஸ்ட்: திருமாவளவன் இப்படியொரு காரணம் சொன்னாலும், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில், திருமாவளவன் மட்டும் தான் விழாவில் கலந்து கொள்ளவில்லை.. மற்றபடி, சிறுத்தைகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள். திருமாவின் அனுமதியும் ஆசியும் பெற்றே கலந்துகொள்கிறார்கள். தனது கட்சியினர் பெருமளவில் கலந்துகொண்டு, விழாவை சிறக்க வைக்க வேண்டும் என்று திருமாவளவனே கட்சி நிர்வாகிகளை அனுப்பி வைக்கிறார் என்கிறார்கள்.
அதாவது, விஜய்யின் அரசியலை சிறுத்தைகள் ஆதரிக்கிறது (விஜய்யின் திமுக எதிர்ப்பு அரசியல்) என்பதை விஜய் உணரும் வகையில் சிறுத்தைகளின் பங்களிப்பு விழாவில் பெருமளவு இருக்க வேண்டும் என்பதே திருமாவின் விருப்பம்.
விசிக மெசேஜ்: திருமாவளவன் என்ற ஒருவரை மட்டும் திமுக கட்டுப்படுத்தலாம்.. ஆனால், ஒட்டுமொத்த சிறுத்தைகளையும் கட்டுப்படுத்த முடியாது என்பதையும், எங்களது அரசியலில் திமுக தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதையும் திமுக தலைமைக்கு உணர்த்தும் ஒரு செய்தியாகப் போய்ச்சேர வேண்டும் என்பதற்காகவே சிறுத்தைகளை விழாவுக்கு அனுப்பி வைக்கிறது எங்கள் தலைமை என்கிறார்கள் சிறுத்தைகளின் மாநில நிர்வாகிகள்.
Weather Data Source: Wettervorhersage 21 tage