அமித்ஷா விவகாரம்- பதுங்கு குழி பழனிசாமி அமைதியோ அமைதி.. எடப்பாடி மீது அமைச்சர் ரகுபதி கடும் அட்டாக்!

post-img
சென்னை: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடந்து வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைதி காப்பது ஏன்? என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று? எனவும் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் ரகுபதி. இது தொடர்பாக தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்துக் கிடக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இன்று நாடு தழுவிய போராட்டத்தில் திமுகவும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு முழுக்க திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது. நாடாளுமன்ற வளாகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். சட்டமேதை, சமத்துவப் போராளி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார். ஒன்றிய பாஜக அரசு மக்களாட்சியை அழிக்க கொண்டுவரத் துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி, அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவைக் கண்டிக்க கூட வேண்டாம் "வலிக்காமல் வலியுறுத்த" கூட மனமில்லாமல் அமைதி….அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் பழனிசாமி. யார் கண்ணில் படாமல் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டிருக்கும் பழனிசாமியைக் கண்டால் யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று. இவ்வாறு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Post