டெல்லி: இந்தியாவில் ரயில்கள் தாமதம் ஆவது வழக்கமான ஒன்று தான் என்றாலும் ஒரு ரயில் சுமார் 3.5 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆகியிருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. 48 மணி நேரத்தில் பயணத்தை முடிக்க வேண்டிய இந்த ரயில், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னரே சேர வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்துள்ளது.
நமது நாட்டில் ரயில்கள் தாமதமாக இயங்குவது வழக்கான ஒன்றுதான். அதிலும் குளிர் காலங்களில் வட இந்தியாவில் ரயில்கள் 12 முதல் 24 மணிநேரம் கூட வரை அடிக்கடி தாமதமாக இயக்கப்படும். சாதாரண நாட்களில் 2-3 மணி நேரத்தில் முடியும் பயணம் கூட 6-7 மணி நேரம் வரை ஆகலாம்.
தாமதம்: இந்த காலதாமதம் பயணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். ஆனால், இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஒரு ரயில் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு வாரம் தாமதம் ஆகியிருக்குமா என நீங்கள் கேட்கலாம்.. ஆனால், இந்த ரயில் சில வாரங்களோ அல்லது சில மாதங்களோ தாமதம் ஆகவில்லை.. மாறாக ஆண்டுக் கணக்கில் தாமதம் ஆகியிருக்கிறது.
3 ஆண்டுகளுக்கு மேல்: இந்த குறிப்பிட்ட ரயில் தனது பயணத்தை 42 மணி நேரத்தில் முடிக்க வேண்டியது. ஆனால், அந்த ரயில் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகே சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்துள்ளது. ஏது இந்தளவுக்குத் தாமதமா.. இது எதாவது 1950 அல்லது 1960களில் நடந்து இருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், உண்மை என்னவென்றால் இந்தச் சம்பவம் சமீபத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தான் நடந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து இந்த சரக்கு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் உத்தரப் பிரதேசத்தின் பஸ்திக்கு செல்ல வேண்டும். வழக்கமாக 42 மணி நேரத்தில் இந்த இலக்கை அடைந்துவிடலாம். ஆனால், இந்த ரயில் கிளம்பியதோடு சரி, தான் சென்று சேர வேண்டிய இடத்தை அடைந்ததாகத் தெரியவில்லை.. வாரக் கணக்கில் மாதக் கணக்கில் இந்த ரயில் தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டது. இறுதியில் சுமார் 3 ஆண்டுகள், 8 மாதங்கள் மற்றும் 7 நாட்களுக்குப் பிறகு அந்த ரயில் உபி சென்றடைந்துள்ளது..
பின்னணி: கடந்த 2014ஆம் ஆண்டு, உத்தரப் பிரதேச மாநிலம் பாஸ்தி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திர குப்தா என்ற தொழிலதிபர், விசாகப்பட்டினத்தில் உள்ள இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் நிறுவனத்திடம் உரத்தை ஆர்டர் செய்துள்ளார். சுமார் ரூ. 14 லட்சம் மதிப்பிலான டைஅமோனியம் பாஸ்பேட் என்ற உரத்தை அவர் ஆர்டர் செய்துள்ளார்.
மாயம்: இதையடுத்து பொட்டாஷ் நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு நவ. 10ம் தேதி திட்டமிட்டபடி ஒரு சரக்கு ரயிலில் அந்த உரத்தை ஏற்றியுள்ளது. சுமார் 1,316 சாக்குகளில் அந்த உரம் ஏற்றப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி ரயில் அதன் இலக்கை அடையவில்லை. இதனால் ராமச்சந்திரா குப்தா தனது சரக்கு வந்து சேரவில்லை என்று புகாரளித்துள்ளார். முதலில் வழக்கமான தாமதம் தான் சீக்கிரம் வந்துவிடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால், அது வாரக் கணக்கில் தாமதம் ஆகியுள்ளது.
இதையடுத்து ராமச்சந்திரா குப்தா மீண்டும் மீண்டும் இது தொடர்பான புகார்களை எழுப்பினார். அதன் பிறகே ரயில் சேருமிடத்தை இடையவில்லை என்றும் போகும் வழியிலேயே மாயமாகி இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த சரக்கு ரயில் எப்படியோ வழிதவறி சென்றது தெரிய வந்தது.
கடைசியில் என்னாச்சு: இந்த சரக்கு ரயிலில் ஒரு பெட்டியில் பிரச்சினை இருந்ததால் அதை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. பிரச்சினை இருக்கும் சம்பந்தப்பட்ட அந்த பெட்டியை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், யாரும் அதை மாற்றவில்லை என தெரிகிறது. அப்படியே அந்த சரக்கு ரயிலையே ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
அதன் பிறகே டிராக் செய்து ரயில் எங்கே இருக்கிறது என்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாகப் பிரச்சினை சரி செய்யப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. கடைசியாக 3 ஆண்டுகளுக்கு பிறகு கடைசியாக 2018ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி தான் அந்த ரயில் சென்றடைந்தது. இருப்பினும், சுமார் 3 ஆண்டுகளுக்கு மேல் தாமதம் ஆனதால் உள்ளே இருந்த அனைத்து உரங்களும் நாசமாகியிருந்தது.
Weather Data Source: Wettervorhersage 21 tage