கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகப் பள்ளி திறப்பு 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கேற்ப அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொண்டு வந்தன.ஆனால் வெயிலின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி போகும் என்ற என்ற கேள்வி எழுந்தது.
மேலும் வெயில் தாக்கம் குறையாமல் இருந்ததால் பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குறைந்தது தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்காவது விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழக்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்த புதுச்சேரி மாநிலத்திலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், 7-ம் தேதி பள்ளி திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகளை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் நேற்று முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் இதுகுறித்து முடிவெடுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதுமட்டுமின்றி கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் 105 டிகிரியை தாண்டி பதிவாகி வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வருகின்ற 14-ஆம் தேதி திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளளார்.