அரெஸ்ட் ஆன அல்லு அர்ஜுன்.. கேஸ் போட்டது துரதிஷ்டவசமானது! ஆதரவாக வந்த ’தேனிசை தென்றல்’ தேவா!

post-img
மதுரை: புஷ்பா-2 வெளியீட்டின் போது இளம் பெண் ஒருவர் நெரிசலில் சிக்கி பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது மற்றும் சிறுவன் மூளைச் சாவு விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது என கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளரான தேவா. புஷ்பா 2 திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியான போது சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்களை சந்திக்க அல்லு அர்ஜுன் சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிர் இழந்தார், இதை அடுத்து அந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பேன் எனக்கூறிய அல்லு அர்ஜுன் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தருவதாக உறுதியளித்திருந்தார், இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிக்கடபள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அல்லு அர்ஜுன், அவரது பாதுகாவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட திரையரங்கத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இனிமேல் வரும் காலங்களில் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லன தெலுங்கானா அரசும் அறிவித்தது. இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே அந்த சம்பவத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து தெலுங்கானா சட்டப்பேரவையில், அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த அல்லு அர்ஜுன், என்னைப் பற்றிய தவறான தகவல்கள், தவறான குற்றச்சாட்டுகள் பரவுகின்றன. நான் எந்தத் துறையையும் எந்த அரசியல் தலைவரையும் குற்றம்சாட்டவில்லை. ஆனால், இவர் இப்படிப்பட்டவர் என தவறான குற்றச்சாட்டுகளை சொல்வது என்னை அவமானப்படுத்துகிறது" என கூறியிருந்தார். இசையமைப்பாளர் தேவா: இந்நிலையில் அல்லு அர்ஜுன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது என கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளரான தேவா. மதுரையில் இசை அமைப்பாளர் தேவா லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஒத்தக்கடை அருகே உள்ள வேலம்மாள் மைதானத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மதுரை விமான நிலையம் அருகே தேவா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது எனது பாடல் "வராரு வராரு அழகர் வாராரு என்ற பாடல்" ஒலித்துக் கொண்டே இருக்கும் அது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதனை நான் முதல்முறையாக மதுரை மண்ணில் பாட இருக்கிறேன். இதற்கான வாய்ப்பை கேப்டன் விஜயகாந்த் எனக்கு அளித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். காலம் கடந்து எனது இசையும், ராஜா இசையும் இருப்பதற்கு மிகப்பெரிய பாக்கியம் செய்திருக்கின்றேன். எனக்கு அனிருத் ரொம்ப பிடிக்கும் அவர் லேட்டஸ்ட் ஆக ஸ்பீடாக இருக்கிறார். எனக்கு நடிக்க நிறைய படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பண்ண விருப்பமில்லை. இசை வொர்க் டைட்டாக இருப்பதால் நடிக்க விரும்பவில்லை. தற்போது இருக்கக்கூடிய இசையமைப்பாளர்களுக்கு இசை பிடிக்கவில்லை என்றால் தலைமுறை இடைவெளி இருக்கிறது என்று தான் அர்த்தம். எனக்கு அனைவரின் இசையும் பிடிக்கத்தான் செய்கிறது. ஹைதராபாத்தில் புஸ்பா-2 படத்தின் போது அல்லு அர்ஜூனை காண சென்றபோது கூட்ட நெரிசலில் பெண் மற்றும் சிறுமி உயிர் இழந்த விவகாரத்தில் நடிகரின் மீது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் யார் மீது யார் குற்றம் என சொல்ல முடியாது" என்றார். தொடர்ந்து இளையராஜா விவகாரம் குறித்து பேசிய அவர்," ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பு நடைபெறவில்லை. அதனை அவரும் கூறியிருக்கிறார். அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட்டதை நான் தொலைக்காட்சி வாயிலாக பார்த்தேன்" என்றார்.

Related Post