கடலூர்: சென்னையில் வெள்ளம் வந்தால் 9-வது மாடியில் இருப்பவருக்கு கூட நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கப்படுகிறது ஆனால் வட மாவட்டங்களில் வெள்ளம் வந்தால் 2000 ரூபாய் தான் வழங்கப்படுகிறது எனவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலம் கணக்கெடுப்பு செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகம் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் நோய் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர்,” சாத்தனூர் அணையை திறக்கப் போகிறோம் என்பதை குறைந்தது 5 மணி நேரத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்க வேண்டும். முன்கூட்டியே அறிவுறுத்தல் வழங்காததால் டிவி பைக் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சோதாரமாகியுள்ளது.
இந்த சேதாரங்களுக்கு தமிழக அரசு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் அட்டைக்கு 2000 ரூபாய் வழங்கியிருப்பது ஆணவமான செயல். சேதம் அடைந்துள்ள வீடுகளை பெருக்கி துடைப்பதற்கு கூட இந்த 2000 ரூபாய் போதாது. அந்த வீட்டில் உள்ள பொருட்களுக்கு யார் நிவாரணம் கொடுப்பது. சென்னையில் வெள்ளம் வந்தால் 9-வது மாடியில் இருப்பவர்களுக்கு கூட 6000 ரூபாய் கொடுக்கப்பட்டது.
அதே போல தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோதும் அங்கு 6000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசு வெறும் 2000 ரூபாய் மட்டும் கொடுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் என்ன பாவப்பட்ட மக்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்களா? எங்கு வந்தாலும் வெள்ளம்.. வெள்ளம்.. தான் பாதிப்பு.. பாதிப்பு.. தான்
வரும் வழியில் பார்த்தேன் விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண்மூடி போய் கிடக்கிறது அவற்றை சீர் செய்வதற்கு தமிழக அரசு எந்த இழப்பீடும் அறிவிக்கப்படவில்லை. சில பகுதிகளில் திமுக கிளை செயலாளர்கள் மூலமாக வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கணக்கெடுக்கப்படுகிறது ஏனென்றால் பணம் வந்தால் அவர்கள் மூலமாக கமிஷன் எடுத்துக் கொண்டு மீதி கொடுப்பார்கள். செந்தில் பாலாஜி இந்திய சுதந்திரத்திற்காக போராடி விட்டு 400 நாள் சிறையில் இருந்து திரும்பி உள்ளார் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”இந்த வெள்ள பாதிப்பால் 20000 மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது எத்தனையோ குடிசைகள் சேதாரம் ஆகி உள்ளது. அதிமுக ஆட்சியிலும் சரி திமுக ஆட்சியிலும் சரி தானே புயலுக்குப் பிறகு கடலூர் மாவட்டம் குடிசையில் மாவட்டம் என்று அறிவித்தார்கள். கடலூர் மாவட்டத்தில் 4000 ஏக்கர் விவசாய நிலங்கள் அழிந்துள்ளது. காரணம் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மணல் விவசாய நிலங்களில் வந்து மலை மேடு போல குவிந்துள்ளதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி இறைத்தது தவறு. அமைச்சர் மீது மட்டுமல்ல யார் மீதும் சேற்றை வாரி இருப்பது தவறு. அதே நேரத்தில் மக்களின் கோபம் புரிகிறது. ஆனால் கோபத்தை வெளிப்படுத்த வேறு வழிகள் உள்ளது. அதே நேரத்தில் அந்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் தவறு.” என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage