சென்னை: அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சௌமியா அன்புமணி, சினிமா தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கும் நிலையில், பத்திரிகையாளரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், சங்கமித்ராவிடம் மடக்கி மடக்கி கேள்வி கேட்டார். அதை மழுப்பலாக சமாளித்துள்ளார் சங்கமித்ரா.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, 'அலங்கு’ எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய படம் எனக் கூறப்படுகிறது. இப்படம் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், 'அலங்கு’ திரைப்படத்தின் பிரிவியூ ஷோ பத்திரிகையாளர்களுக்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, தயாரிப்பாளர் சங்கமித்ரா அன்புமணி, இயக்குநர் எஸ்பி சக்திவேல் உள்ளிட்ட படக்குழுவினர் வந்திருந்தனர். படம் பார்த்தபிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் தயாரிப்பாளர் சங்கமித்ரா.
அப்போது, பத்திரிகையாளரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், “டாக்டர் ராமதாஸ் சினிமாவை எதிர்க்கிறார். நீங்கள் படம் எடுக்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சங்கமித்ரா, “அவர் சினிமாவை எதிர்க்கவே இல்லையே” என்றார். அதற்கு பயில்வான் ரங்கநாதன், “ரஜினி பட பெட்டியை தூக்கிக்கொண்டு போனது யார்?” என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார்.
இந்தப் படம் நல்ல கருத்தை கொண்டிருக்கிறது. இதை என்கரேஜ் பண்ணுங்கண்ணா.. நாம சர்ச்சையை ஏற்படுத்த வேணாமே.. டைவர்ட் பண்ண வேணாமே" என கெஞ்சும் தொனியில் கேட்டார் சங்கமித்ரா. மேலும், "அவர்களே சுமூகமாகச் சென்றுவிட்டார்கள். ரஜினிகாந்த் வீட்டு கல்யாணத்துக்கு ராமதாஸ் அய்யா செல்கிறார். அவர்கள் நம் வீட்டு கல்யாணத்துக்கு வருகிறார்கள். எல்லாம் சரியாகிவிட்டது. நாம் தான் அதை இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார் சங்கமித்ரா.
மேலும், அலங்கு திரைப்படம் பற்றி தனது விமர்சனத்தைக் கூறிய பயில்வான் ரங்கநாதன்., "படம் மோசமில்லை" எனத் தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர் சங்கமித்ரா உள்ளிட்ட படக்குழுவினருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
பத்திரிகையாளரும், திரைப்பட விமர்சகரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர். பயில்வான், ரங்கநாதன் சினிமாவை விமர்சிப்பதை தாண்டி மற்றவர்களின் தனிப்பட்ட வழக்கை குறித்தும் அவ்வப்போது விமர்சித்து சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
பயில்வான் ரங்கநாதன் இருந்தாலே, ஏதாவது எடக்கு மடக்காக கேள்வி கேட்டு சிக்கலை உண்டாக்குவார் என சினிமா உலகினரே தெறித்து ஓடுவதும் உண்டு. இப்படியான சூழலில், அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவிடம் பயில்வான் ரங்கநாதன் குடைந்து குடைந்து கேட்டபோதும், மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார் சங்கமித்ரா.
முன்னதாக, அலங்கு திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட நிலையில், விஜய்யை சந்தித்த அலங்கு படக்குழுவினர், அவருக்கு அலங்கு பட ட்ரெய்லரை போட்டுக் காட்டி வாழ்த்து பெற்றுள்ளனர். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசிய அலங்கு படக்குழுவினரிடம், விஜய, ட்ரெய்லர் சூப்பராக இருப்பதாக பாராட்டியுள்ளார். விஜய், தன்னை காண வந்த அலங்கு படக்குழுவினருக்கு புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார்.
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.