டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே ஆர்பிஐ-இன் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு இப்போது ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமித்து உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் பொருளாதாரம் ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பதில் ரிசர்வ் வங்கிக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கியின் முடிவைப் பொறுத்தே பொருளாதாரம் இருக்கும்.
இப்போது நமது நாட்டின் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் இருக்கிறார். இப்போது ஆர்பிஐ கவர்னராக சக்திகாந்த தாஸ் இருக்கிறார். கடந்த 2018ம் ஆண்டு டிச.12ம் தேதி பதவியேற்று இருந்தார். கடந்த 2021ம் ஆண்டு இவரது பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்பை வழங்கியிருந்தது.
ரிசர்வ் வங்கி கவர்னர்: இதையடுத்து அவரது பதவிக்காலம் நாளை டிச. 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார் என்பதில் கேள்வி எழுந்தது. இதில் பலரது பெயர்கள் அடிப்பட்டன. சக்திகாந்த தாஸுக்கு மீண்டும் ஒரு முறை பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என்று கூட தகவல் வெளியானது. இதற்கிடையே ஆர்பிஐ-ன் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
நியமனம்: அதாவது ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளரான சஞ்சய் மல்ஹோத்ரா ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வரும் டிச. 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பதவியேற்கவுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஆர்பிஐ ஆளுநராகச் செயல்படுவார்.
பின்னணி: 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, இப்போது நிதி அமைச்சகத்தில் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். நிதி, வரி, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் 33 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர் சஞ்சய் மல்ஹோத்ரா.
கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ப்பளிக் பாலிசி பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ள மல்ஹோத்ரா, பாலிசி வகுப்பதில் நிபுணத்துவம் பெற்றவராக அறியப்படுகிறார்.
ஏன் முக்கியம்: மல்ஹோத்ரா இதற்கு முன்பு நிதிச் சேவைத் துறையில் செயலாளராக இருந்தார். அங்கு அவர் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வங்கித் துறைகளை மேற்பார்வையிட்டார். மேலும், சில ஆண்டுகள் அவர் மத்திய அரசின் ஆர்இசி (REC Ltd.) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். அவர் தலைவராக இருந்த காலகட்டத்தில் ஆர்இசி நிறுவனம் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2022 டிசம்பர் மாதம் வருவாய்த் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கான வரிக் கொள்கைகளை வகுப்பதில் மல்ஹோத்ரா முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், ஜிஎஸ்டியை நிர்வகிக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் செயலாளராக மல்ஹோத்ரா இருந்துள்ளார். இப்படி நிதித் துறையில் குறிப்பாக வரி விதிப்பில் அனுபவம் கொண்ட ஒருவரையே மத்திய அரசு இப்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage