2023 ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு..

post-img

சென்னை: 2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.


மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் 2023ம் ஆண்டில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.


இதில் இந்தியாவில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியர்கள் 50 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை என மொத்தம் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.


அதாவது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு டெல்லி விஞ்ஞான் பவனில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.


இந்த விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்க உள்ளார். மேலும் மாநில அரசு சார்பில் 385 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியல் இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்த பிறகு இறுதிக்கட்ட பட்டியல் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post