சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரி வசூலைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாநகராட்சி தனது வருவாயை அதிகரிக்க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கத் திட்டமிட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மறுபுறம் முக்கியமாகச் சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாயையும் அதிகரிக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சொத்து வரியை வசூலிப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சொத்து வரி வசூல் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே வரும் செப்டம்பர் 30க்குள் ரூ.700 கோடி என்ற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி நெருங்கி வருகிறது.
இந்தாண்டு ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் சுமார் ஏழு லட்சம் பேர் சொத்து வரி செலுத்தியுள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ. 91 கோடி அதிகமாகும். கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 24 வரை, 7 லட்சம் பேரிடம் இருந்து ரூ.680.58 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ரூ.589 கோடி சொத்து வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
புது சட்டம்: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் அமல்படுத்தப்பட்டு 6 மாதங்கள் நிறைவடையும் நிலையில், வரி வருவாய் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதில் சில பிரச்சினைகள் இருந்ததாக மக்கள் கூறிய நிலையில், அதைச் சரி செய்ய இந்தச் சட்டத்தில் பல திருத்தங்கள் தமிழக அரசு விரைவில் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செப். 30 இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களில் தினசரி சொத்து வரி வருவாய் ரூ. நான்கு கோடியாக அதிகரித்தது. அதிலும் குறிப்பாகக் கடைசி நாளான செப்டம்பர் 30ஆம் தேதி வரி வசூல் ரூ.40 கோடியை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், சொத்து வரி வசூல் தொடர்பான பிரச்சினைகள் இருப்பதாகச் சிலர் கூறியிருக்கும் நிலையில், அவர்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.
வலியுறுத்தல்: நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது குறித்த கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. அதில் ஆலந்தூர், அம்பத்தூர், மாதவரம் போன்ற பகுதிகளில் சொத்து வரி அதிகமாக இருப்பதாகவும் அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் முறையிட்டனர்.
கடந்த முறை வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்ட போது இந்த ஏரியாக்களில் வரி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும், இந்த ஏரியாக்களில் சொத்து வரி அதிகமாக இருக்கும் நிலையில், அதை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தாக கூறப்படுகிறது.
6.5 லட்சம் பேர்: சென்னையில் 13.5 லட்சம் பேர் சொத்து வரி செலுத்தும் நிலையில், அதில் கடைசி 5 நாட்களில் மட்டும் 6.5 லட்சம் பேர் வரி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி செலுத்தும் போது உரிமையாளர்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி உரியக் காலக்கெடுவிற்குள் வரி செலுத்தத் தவறியவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் 1% வட்டி அபராதமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நகரின் 15 மண்டலங்களில் இருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்த ஏதுவாக நேரடியாக அவர்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு க்யூஆர் கோட்களை அனுப்பவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் முதல் 15 நாட்களுக்குள் வரி செலுத்துவோருக்கு 2% ஊக்கத்தொகையை வழங்கப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.