ஆங்கிலேயர்களால் கொண்டு வரபட்ட பெயர் இந்தியா.. பாரத் என மாற்றுங்க..

post-img

மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. தங்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்ததில் இருந்தே ஆளும் பாஜக தரப்பு 'பாரத்' என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், தான், இந்தியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அச்சடிக்கப்பட்டு இருக்கும் அழைப்பிதழில் பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ந்த நாடுகள் பலவற்றை உள்ளடக்கிய ஜி 20 நாடுகளின் கூட்டமைப்புக்கு இந்த முறை இந்தியா தலைமை தாங்குகிறது. இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லியில் வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். இந்த ஜி 20 மாநாட்டுக்கான அழைப்பிதழில் தான் பாரத் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். மாநிலங்களின் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனிடையே, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி ஹர்னத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஹர்னத் சிங் கூறுகையில், "இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் நமக்கு கொடுத்தது. பாரத் என்பது நமது கலாசாரத்தின் அடையாளம். நமது அரசியல் அமைப்பில் திருத்தம் செய்து பாரத் என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்றார்.

அண்மையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தும் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. மோகன் பகவத் கூறும் போது, "மக்கள் புரிந்து கொள்கிறார்களா இல்லையா என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா என்று நாம் சொல்லக்கூடாது. பாரத் என்று சொல்ல வேண்டும்" என்றார். பாஜக எம்.பி நரேஷ் பன்சாலும் இதே கோரிக்கையை மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார்.

Related Post