படையப்பாவுக்கு கோவம் வந்துடுச்சு.. மூணாறு ரோட்டில் இறங்கி கார்களை நொறுக்கிய யானை.. மக்கள் பீதி!

post-img
மூணாறு: மூணாறு பகுதியில் படையப்பா யானை கார்கள், டூ வீலரை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த படையப்பா யானை, திடீரென டென்ஷனாகி வாகனங்களை அடித்து நொறுக்கியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே யானை ஒன்று அடிக்கடி உலா வருவது வழக்கம். அந்த யானைக்கு படையப்பா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மூணாறு பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வந்த படையப்பா காட்டு யானை, உணவு தேடி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு பரிட்சயமானதாக இருந்து வருகிறது. மூணாறு சுற்றுவட்டார பகுதியில், படையப்பா யானை, ஒற்றைக் கொம்பன் யானை ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை தின்றும், கொட்டியும் நாசம் செய்கின்றன. விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், குட்டியார் வேலி, சைலண்ட் வேலி ஆகிய எஸ்டேட் பகுதிகளில் முகாமிட்டிருந்த படையப்பா யானை கடந்த 12 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு சாலையில் இறங்கியது. அப்போது சைலண்ட் வேலி பகுதியில் சீரியல் ஷூட்டிங் முடிந்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் திரும்பிக் கொண்டிருந்தன. அப்போது வாகனங்களுக்கு இடையில் புகுந்து சாலையின் நடுவே படையப்பா யானை சிக்கிக் கொண்டது. யானையின் முன்னும், பின்னும் வாகனங்கள் வந்தன. இதனால், சாலையை கடக்க முடியாமல் தவித்த படையப்பா யானை ஒரு கட்டத்தில் ஆக்ரோஷம் அடைந்து இரண்டு கார்களை துதிக்கையால் அடித்து நொறுக்கியது. யானை தாக்கியதால், காரில் இருந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடியதால், காயமின்றி தப்பினர். தகவல் அறிந்து வந்த வனத்துறை யானை தடுப்பு பிரிவினர் படையப்பா யானையை விரட்டினர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. படையப்பா யானை திடீரென 2 கார்கள், ஒரு டூ வீலரை துதிக்கையால் நொறுக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Post