சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தினை மக்கள் இலவமாக காண வேண்டும் என்ற நோக்கில் 1000 டிக்கெட்டுகளை பாஜகவின் பி வினோஜ் செல்வம் சென்னையில் வீடு வீடாக விநியோகித்து வருகிறார்.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனுமான் திரைப்படம் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். மேலும், அனுதீப் தேவ், ஹரி கௌர, ஜெய் கிரிஷ், கிருஷ்ணா சௌரப்லு ஆகியோர் சேர்ந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர்
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் கே. நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தயாரிக்க ஸ்ரீமதி சைதன்யா வெளியிட்டார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதை என்னவென்றால், ஆந்திராவில் உள்ள அஞ்சனாத்ரி என்ற கிராமத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் வரலட்சுமியும் வசித்து வருகிறார்கள். இந்த ஊருக்கு மருத்துவப் படிப்பை முடித்த தேஜா சஜ்ஜாவின் தோழியான அமிர்தா ஐயர் ஊருக்கு வருகிறாள். அப்போது மீனாட்சியின் பேருந்தில் கொள்ளையர்கள் ஏறுகிறார்கள். அந்த நேரத்தில் அனுமன் வந்து அமிர்தா ஐயரை காப்பாற்றுகிறார்.
அப்போது அந்த கொள்ளையர்கள் ஹனுமானை அடித்து ஆற்றில் தூக்கி வீசுகிறார்கள். ஹனுமான் தண்ணீருக்கு அடியில் மூழ்கும்போது,அவன் கண்ணில் முத்து ஒன்று தென்படுகிறது. அந்த முத்துவால் தேஜா சஜ்ஜா சூப்பர்மேன் போல் ஆகிவிடுகிறார். இந்த அபூர்வ முத்து பற்றி வில்லன் வினய் ராய்க்கு தெரியவர அதை அடைய திட்டம் போடுகிறான். இறுதியில் யார் வென்றது என்பது தான் படத்தின் கதையாகும். இந்த படம் தெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரத்திற்கு போட்டியாக களம் இறங்கியது. குண்டூர் காரத்தையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஹனுமான் திரைப்படம் பார்த்த நெட்டிசன்கள் பலரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் படம் வந்த போது கூறுகையில், ஹனுமான் படத்தின் முதல்பாதி சூப்பர் அதே போல VFX, விஷூவல் மற்றும் சூப்பர் ஹீரோ கதை சொல்லிய விதம் அருமை. பான் இந்திய சினிமாவில் தெலுங்கு சினிமா மீண்டும் இடம்பிடித்துள்ளது. தேஜ சஜ்ஜா, வரலட்சுமி மற்றும் கெடப் ஸ்ரீனு காமெடி ஹைலைட் என்று கூறியிருந்தார்.
இதனிடையே ஹனுமானின் தீவிர பக்தரான ஒருவர், படத்தை முதல் காட்சியை பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டி உள்ளார். அதில், படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒவ்வொரு காட்சியும் இருக்கையின் நுனியில் அமரவைத்துவிட்டது. தியேட்டர் மொத்தமும் ஜெய் ராம் கோஷம் ஒலித்ததை கேட்கும் போது, கூஸ்பம்ஸ் என்று தான் சொல்லவேண்டும்.இப்படி ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குநர் பிரசாந்த் வர்மாவுக்கு மிகபெரிய நன்றி என்று கூறியிருந்தார்.
கடந்த ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் அயோத்தியில் திறக்கப்பட்ட நிலையில், தங்களது திரைப்படத்துக்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவோம் என ஹனுமன் திரைப்படக்குழு அறிவித்திருந்தது.
ஹனுமன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இந்த படத்தை சென்னை ரசிகர்கள் இலவசமாக காண வேண்டும் என்ற நோக்கில் பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் 1000 டிக்கெட்டுகளை தன்னார்வலர்கள் முழுவதும் விநியோகித்து வருகிறார். மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட 1000 பேருக்கு வீடு வீடாக ஹனுமன் திரைப்பட டிக்கெட் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த தகவலை வினோஜ் பி செல்வம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களை அவர் வெகுவாக பாராட்டி உள்ளார்.