திருநெல்வேலி: "அம்பேத்கர் பெயரை சொன்னால் உனக்கு பேஷனா? அம்பேத்கர்னா ஃபிளவர் இல்லையா.. ஃபயர்யா" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று யார் நினைக்கிறானோ அவன் வாயில் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என்றுதான் வரும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இமானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகிறார்.. யாரைப் பார்த்தாலும் அண்ணல் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என சொல்லுவது ஃபேஷனாகப் போய்விட்டது என்று சொல்லிவிட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்.
அந்த அமைச்சருக்கு நான் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அம்பேத்கர் பேரை சொன்னா உனக்கு ஃபேஷனா? இப்ப ஒரு படம் வந்திருக்கு.. புஷ்பான்னு.. அம்பேத்கர்னா ஃபிளவர் இல்லையா.. அம்பேத்கர்னா ஃபயர்... எல்லோரும் இன்று அம்பேத்கரை உயர்த்திப் பேசுகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று அம்பேத்கரை பற்றி பேசுகிறது.
இன்றைக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன சொல்கிறார்? ஒரு நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால்.. நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால்.. அரசியல் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என யார் நினைக்கிறானோ அவன் வாயில் இருந்து அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர் என்றுதான் வரும். இன்றைக்கும் அந்த ஆரியக் கூட்டம் நம்மை அடக்கி ஒடுக்குகிறது என்பதை பண்ருட்டி வேல்முருகன் விவரித்தார். அந்த ஆரியக் கூட்டத்துக்கு என்றைக்குமே இடம்தராத இயக்கம்தான் இந்தியா கூட்டணி.. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.