காஸாவில் 500 பேர் பலி-ஜோர்டான், துருக்கி, துனீசியா..வெடித்த போராட்டஙகள்

post-img

அம்மான்: பாலஸ்தீனத்தின் காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானப் படை நிகழ்த்திய படுபயங்கரமான குண்டுவீச்சுகளில் 500க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. ஜோர்டான், துருக்கி, துனீசியா உள்ளிட்ட நாடுகளில் இஸ்ரேல் தூதரகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் வெடித்தன. ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஜிஹாதிகள் இடையேயான யுத்தம் 12-வது நாளாக தொடருகிறது. இந்த யுத்தத்தின் அதி உச்சமாக, காஸாவின் மருத்துவமனை மீது இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை இரவு சரமாரியாக குண்டுகளை வீசியது.
இந்த மருத்துவமனையை பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்த அகதிகள் முகாமாக பயன்படுத்தியிருந்தனர். இஸ்ரேலின் இந்த அதிதீவிர தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட தகவல் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. உலக நாடுகள் இந்த கொடூர தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஐநாவின் அமைப்புகளான யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இஸ்ரேலின் இந்த படுகொலையை மிகவும் கண்டித்துள்ளன. காஸா மீதான அத்தனை தாக்குதல்களையும் இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே இஸ்ரேலின் இப்பெருந்தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் ஜெருசலேமில் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேற்கு கரையிலும் நள்ளிரவில் பெருந்திரளானோர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேபோல் ஜோர்டானில் இஸ்ரேலிய தூதரகம் உடனடியாக முற்றுகையிடப்பட்டது. கைகளில் காலணிகளை ஏந்தி ஜோர்டானியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர். அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இஸ்ரேலிய தூதரகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தவிடாமல் பெருமளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டக்காரர்களைக் கலைக்கும் வகையில் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இதேபோல துருக்கி, துனீசியா உள்ளிட்ட பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன.
அமெரிக்காவின் அதிபர் ஜோ பிடன் இஸ்ரேல் வருகை தரும் நிலையில் இந்த பயங்கர படுகொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸையும் ஜோ பிடன் சந்திக்க இருந்தார். ஆனால் இஸ்ரேலின் இக்கொடூர தாக்குதலையடுத்து ஜோபிடனுடனான சந்திபை மஹ்மூத் அப்பாஸ் ரத்து செய்துவிட்டார்.

 

Related Post