சிறுத்தை நடமாட்டம்.. இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியே செல்ல வேண்டாம்.. வேலூர் கலெக்டர் வேண்டுகோள்

post-img
வேலூர்: சிறுத்தை நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியே வெளியே செல்ல வேண்டாம் என்றும் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் தாலுகா துருவம் என்ற கிராமத்தில் ஒரு பெண் சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் வேலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் தாலுகா துருவம் என்ற கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரை சிறுத்தை ஒன்று தாக்கி கொன்றுவிட்டதாக கிராம மக்களின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையின் சார்பில் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வனச்சரகர் தலைமையில் வனத்துறை காவலர்கள் தொடர்ந்து தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்தால் குடியாத்தம் வனச்சரக அலுவலரின் 9715516707 என்ற தொலைபேசி எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். மேலும் குடியாத்தம் வனச்சரகத்திற்குட்பட்ட ஒரு சில கிராமப் பகுதிகளில் நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வனத்துறை அலுவலர்களால் அந்த பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயம் ஏதும் தென்படவில்லை என வனத்துறை அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் இருப்பிடங்களில் இரவு நேரங்களில் வெளிப்புறங்களில் வெளிச்சமாக இருக்கும் வகையில் விளக்குகளை எரிய விட வேண்டும். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்" இவ்வாறு அதில் வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

Related Post