சென்னை: கூட்டணி குறித்து தேசிய தலைமை கூறும் ஆலோசனையை அண்ணாமலை நாளை மறுநாள் நடைபெறும் பாஜக ஆலோசனை கூட்டத்தில் எங்களுக்கு தெரிவிப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. அதிமுக, பாஜக உடனான கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் என்பதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இதற்கிடையே அண்ணாமலை டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், இன்று நடக்க இருந்த மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் அமித் ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதிமுக தங்களுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அண்ணாமலை இல்லாமல் பாஜக பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது.
அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட பிறகு, பாஜக தலைவர்கள் இதுகுறித்து எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர். கூட்டணி தொடர்பாக தேசிய தலைமையே அறிவிக்கும் எனக் கூறி வருகின்றனர். முன்பு அதிமுகவை சரமாரியாக சீண்டி வந்த அண்ணாமலையும், சைலண்டாக இருந்து வருகிறார்.
அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவித்ததுமே அதிமுகவை விமர்சிக்கும் வகையில் கருத்துக் கூறிய 2 முக்கிய நபர்கள் தங்கள் கருத்தை வாபஸ் பெற்றனர். இவ்வாறாக, அதிமுக கூட்டணி முறிவு விவகாரத்தில் பாஜக தலைவர்களுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில், அண்ணாமலை தேசிய தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதன் பிறகுதான், பாஜகவின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. அண்ணாமலை டெல்லியில் இருந்து கிளம்பும்போதோ, சென்னை வந்தபிறகோ செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிமுக கூட்டணி விவகாரம் பற்றி பேசலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறும் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் அதுகுறித்து பேச உள்ளாராம் அண்ணாமலை.
இதுதொடர்பாக, இன்று பேசிய பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், "நாளை மறுநாள் நடைபெறும் பாஜக கூட்டத்தில் தெளிவான அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். அவர்கள் தெரிவித்த கருத்தை நாளை மறுநாள் எங்கள் தலைவர் ஆலோசனை கூட்டத்தில் பேச இருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.