எங்க அக்கா யோகஸ்ரீ...! CM பார்க்கப் போகிறோம்: அப்பாவியாக பேசிய தங்கைகள்.. கலங்கிய தாத்தா, பாட்டி!

post-img
கரூர்: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகும் சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகி யோகஸ்ரீயின் இரண்டு தங்கைகள் தனது அக்காவை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ஜீ தமிழ் சரிகமப ஜூனியர் சிங்கர் போட்டியில் லட்சக் கணக்கான மக்கள் விரும்பும் பாடகியாக உயரத்தைத் தொட்டு இருக்கிறார் அரசுப் பள்ளி மாணவி யோகஸ்ரீ. இன்றைய இணைய உலகில் அவர்தான் ட்ரெண்டிங் நியூஸ். அந்தளவுக்கு தன் குரல் வளம் மூலம் பலரையும் வசீகரித்திருக்கிறார் அவர். இந்த யோகஸ்ரீ சொந்த ஊர் கரூர் மாவட்டம். அவரது குடும்பத்தில் மொத்தம் 4 பேர் உள்ளனர். அதில் மூன்று பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு ஆண் பிள்ளை. இதில் யோகஸ்ரீதான் மூத்தவர். முதன்முதலாக யோகஸ்ரீ ஊரிலுள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழா மேடையில் பாடி இருக்கிறார். அதன்மூலம் தான் மாநில அளவில் அவர் முதல் மாணவியாக வெற்றிபெறும் அளவுக்கு முன்னுக்கு வந்துள்ளார். அரசுப் பள்ளி மாணவர்கள் இடையே நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் இவர் மாநில அளவில் முதல் பரிசை முதல்வர் ஸ்டாலின் கையால் பெற்றுள்ளார். யோகஸ்ரீயின் குடும்பத்தில் அவரது தந்தைக்கு நன்றாகப் பாட வரும். அதைப்போலவே அவரது அத்தையும் நன்றாகப் பாடும் திறமை பெற்றுள்ளார். அவர்கள் மூலம் இசை இவருக்கு உள்ள புகுந்துள்ளது. சிறுவயது முதலே வீட்டில் பாடல் கலையைச் செவி வழியே உணர்ந்து வளர்ந்துள்ளார் யோகஸ்ரீ. கரூர் மாவட்டம் தாந்தோனி ஒன்றியத்தில் உள்ள மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்தான் யோகஸ்ரீ மற்றும் அவரது தங்கைகள் படித்துவருகின்றனர். யோகஸ்ரீயின் தந்தை கூலித் தொழிலாளிதான். தனது அக்காவுக்கு இரவு நேரங்களில் பாடலை தந்தைதான் சொல்லிக் கொடுப்பார் என்கிறார் அவரது தங்கை அனுஸ்ரீ. பல தொலைக்காட்சிகளுக்குப் பாட வாய்ப்புக் கேட்டு இவரது தந்தை பல படிகளை ஏறி இறங்கியிருக்கிறார். ஆனால், அந்தக் கதவுகள் எளிதாக திறக்கவில்லை. இறுதியாக ஜீ தமிழ் தான் தங்களின் கனவுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது என்கிறார் மழலை முகம் மாறாத இந்தத் தங்கை. யோகஸ்ரீயின் குடும்பத்தினர் அமேசிங் தமிழா யூடியூப்க்கு அளித்துள்ள பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் இந்தக் குடும்பத்தைச் சந்திக்க அழைத்திருப்பதாகப் பெருமையாகச் சொல்லி இருக்கிறார் அனுஸ்ரீ. யோகஸ்ரீயின் விட்டைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. அரசு தொகுப்பு வீடுதான். சின்னஞ்சிறிய இந்த வீட்டில்தான் நான்கு பிள்ளைகள் உட்பட இந்தப் பெற்றோர் குடியிருந்து வருகின்றனர். டிவியில் பாட ஆரம்பித்த பிறகு பலரும் அவரது ஊரில் இந்தக் குடும்பத்தைப் பாராட்டத் தொடங்கி இருக்கிறார்கள். இவரது தாத்தாவைப் பார்க்கும் போது தாடியும் தலையுமாக இருக்கிறார். வறுமை அவர் முகத்திலும் உடம்பிலும் அப்படியே படிந்து போய் இருக்கிறது. இந்தக் குடும்பத்திற்குக் கிடைத்துள்ள ஒரே சந்தோஷம் யோகஸ்ரீதான். அவர் மூலம் உலக அளவில் ஒரு புகழ் கிடைத்துள்ளது. இந்தத் தாத்தா பொரி வியாபாரம் செய்கிறார். இவரது பாட்டி 100 நாள் திட்டத்தில் வேலைக்குப் போகிறார். அதைவைத்து குடும்பம் ஓடுகிறது. யோகஸ்ரீயின் தந்தை டைல்ஸ் ஒட்டும் வேலை பார்க்கிறார். அது கிடைக்கவில்லை எனில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்குப் போய் வருகிறர். யோகஸ்ரீ சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே அரசுப் பள்ளிகள் நிகழ்ச்சியில் பாடிய வீடியோ வைரலானது. அதன்பின்னர் அவர், 'எங்கெங்கே.. எங்கெங்கே' பாடலைப் பாடி லட்சக் கணக்கான உள்ளங்களைக் கொள்ளையடித்தார். அதைக் கேட்டு நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர்களே நடுநடுங்கிவிட்டனர். 13 வயதில் எந்த ஒரு இசைப் பள்ளிக்கும் போகாத ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவியால் இந்தளவுக்குப் பாட முடியும் என்பதை இந்த மாணவி நிரூபித்துள்ளார். அதனால்தான் நடுவராக இருந்த பாடகர் ஸ்ரீநிவாஸ், 'பாடுவதற்காகவே பிறந்துவந்தவள் நீ' என்று பாராட்டி இருந்தார். அதற்கு அடையாளமாக அவரது குடிசை வீட்டில் பல விருதுகளை அடுக்கி வைத்துள்ளார் இந்த யோகஸ்ரீ. உண்மையாகவே அவருக்கு இந்த நிகழ்ச்சி ஒரு யோகம்தான்.

Related Post