கொல்கத்தா: கணவரின் வீட்டில் அவரது விருப்பத்திற்கு மாறாக மனைவி தனது தோழி மற்றும் குடும்பத்தினரை தங்க வைத்தது கொடுமையான விஷயம் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது விவாகரத்து வழங்குவதற்கான போதுமான காரணம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு கொல்கத்தாவில் தீரஜ் குயின் எனும் இளைஞரும் தனுஸ்ரீ மஜூம்டர் எனும் இளம் பெண்ணும் திருமணம் செய்துக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் திருமணத்திற்கு பின்னர், தீரஜ் குயின் பணியிடத்தில் அவருக்காக கோலாகாட் பகுதியில் வழங்கப்பட்ட கோட்டரஸ் வீட்டிற்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். வழக்கமான திருமண வாழ்க்கையை எதிர்பார்த்திருந்த தீரஜ் குயினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
காரணம் மனைவியும் அவரது தோழியும்தான். மனைவி தனது தோழியான மௌசுமி பால் என்பவரையும், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் கணவரது வீட்டில் தங்க வைத்திருக்கிறார். மனைவியின் தோழி ஒன்றிரண்டு நாட்கள் வீட்டில் வந்து தங்கினால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் இதே வீட்டில் இருந்தால் அது எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்? இது குறித்து தீரஜ் குயின் தனது மனைவியிடம் பேசி பார்த்திருக்கிறார். வேலைக்கு ஆகவில்லை.
சரி இந்த பிரச்னை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் காலகாலத்தில் ஆக வேண்டிய விஷயத்தில் கவனம் செலுத்துவோம் என்று கணவர், மனைவியிடம் நெருங்கியுள்ளார். ஆனால் தாம்பத்தியத்திற்கோ, கணவருடன் நேரத்தை செலவிடுவதற்கோ மனைவி விரும்பவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த கணவர் கடைசியில் விவாகரத்துக்கு அப்ளை செய்தார். ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகுதான் மனைவியின் சுயரூபம் தெரிய வந்திருக்கிறது. அதாவது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவி உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கணவர் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனவே அதற்கு எதிராக கணவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு இன்று நீதிபதிகள் சப்யசாசி பட்டாச்சார்யா மற்றும் உதய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கணவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை அடுக்கியுள்ளார். மனைவியும், கணவர் தன்னையும், தன்னுடைய தோழியையும் கொடுமைபடுத்துவதாக கூறியிருக்கிறார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவருக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர்.
அதாவது, கணவரின் சம்மதம் இல்லாமல் அவரது வீட்டில் மூன்றாவது நபரை மனைவி தங்க வைத்தது கொடுமை. மட்டுமல்லாது கணவருடன் பேசி பழக நேரம் ஒதுக்காமல் அவரை புறக்கணித்ததும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும் நீதிபதிகள் கூறியதாவது, “இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய விஷயம், மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கணவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 498A பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்திருப்பதுதான். ஏன் இதை கவனிக்க வேண்டும் என்று சொல்கிறோம் என்றால்.. கணவர் விவாகரத்து கோரிய பின்னர்தான் மனைவி இந்த பிரச்னை குறித்து பேசியிருக்கிறார், புகார் அளித்திருக்கிறார்.
மேலும் மனைவிக்கு தாம்பத்ய உறவிலும், குழந்தையை பெற்றுக்கொள்வதிலும் விருப்பமில்லை என்று தெரிய வந்திருக்கிறது. எனவே, இது கொடுமையாகவே பாவிக்கப்படுகிறது” என்று கூறி விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தள்ளுபடி செய்து, விவாகரத்து வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமீப காலமாக மனைவி கொடுமையினால் விவாகரத்து கோரும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.