நியூயார்க்: விரைவில் 2வது திருமணம் செய்யப்போகிறார் 60 வயது அமேசான் நிறுவனர்.. இந்த திருமண நிகழ்வை காண பலரும் ஆர்வத்துடன் காத்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் திருமண தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
உலக பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதல் இடத்தில் எலான் மஸ்க் வலுவாக இருக்கிறார்.. இவருக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். கிட்டத்தட்ட 235 பில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரர் இந்த ஜெஃப்.. தற்போது 60 வயதாகிறது..
மெக்கன்சி ஸ்காட் என்பவருடன் இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கடந்த 2018-ம் ஆண்டு, மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.. இதற்காக ஒரு கணிசமான பங்குகளையும், முன்னாள் மனைவிக்கு தந்துவிட்டார். இப்போது ஜெஃப் பெசோஸ் தன்னுடைய 2வது கல்யாணத்துக்கு ரெடியாகி வருகிறார். தன்னுடைய நீண்ட நாள் காதலியான லாரன் சான்செஸுடன் திருமணம் நடக்க போகிறது.
மணப்பெண்: மணப்பெண்ணுக்கு 54 வயதாகிறது.. இவர் ஒரு டிவி பிரபலம் ஆவார்.. The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல டிவி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர்தான் லாரன் சான்செஸ்..கடந்த மே 2023ல் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருமணம் நடக்க போவதாக ஏற்கனவே சொல்லியிருந்தார்கள்.. இப்போது வரும் சனிக்கிழமை அதாவது டிசம்பர் 28ம்தேதி இவர்களின் திருமணம் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாம்.
ஏப்போதுமே இந்த காதல் ஜோடி விடுமுறை என்றாலே அமெரிக்காவின் ஆஸ்பென் நகருக்கு சென்றுவிடுவார்களாம்.. எனவே, தங்கள் கல்யாணத்தையும், இதே ஆஸ்பென் நகரில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர்.. இந்த ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் என்ற மாளிகையில் இந்த திருமணம் நடக்க உள்ளது.
படுஅமர்க்களம்: $600 மில்லியன் அதாவது நம்ம ஊர் கணக்கில், கிட்டத்தட்ட 5096 கோடி ரூபாய் செலவில், படுஅமர்க்களமாக கல்யாணம் ஏற்பாடுகளை செய்திருக்கிறாராம் ஜெஃப்.. அம்பானியும் ரூ.5000 கோடி செலவில்தான் தன்னுடைய மகனுக்கு கல்யாணத்தை செய்திருந்தார். ஆனால், ஜெஃப், திருமண செலவில், அம்பானியையே மிஞ்சிவிடலாம் என்கிறார்கள்.
உலக பணக்காரர்களில் ஒருவர் என்பதால், இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலரும் கலந்துகொள்கின்றனர்.. முக்கியமாக, பில் கேட்ஸ், லியோனார்டோ டிகாப்ரியோ, ஜோர்டானின் ராணி ரானியா உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது. அப்படியானால், மணமக்களுக்குப் பிடித்தமான விஷயங்களையும், திருமண நிகழ்வுக்குக்கொண்டு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவுறுத்தல்: ஆனால், இந்த பிரம்மாண்ட திருமணத்தின் நிகழ்வு ஏற்பாட்டின் முழு விவரங்களை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். எப்படியோ, அமெரிக்காவில் கல்யாண ஏற்பாடுகள் ஜரூராக நடந்து கொண்டிருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.