பேச்சு சுதந்திரத்தை குறைக்கும் வகையில்.. அரசியல் சாசனத்தை திருத்தியதே காங்கிரஸ்தான்! அமித் ஷா தாக்கு

post-img
டெல்லி: ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து அமித் ஷா பேசினார். அப்போது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகப் பேசிய அமித் ஷா, இதில் நேரு மற்றும் இந்திரா காந்தியையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாகவும் அவர் காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார். ராஜ்யசபாவில் அரசியல் சாசனம் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய அமித் ஷா, நமது நாட்டை ஒருங்கிணைப்பவர் சர்தார் வல்லபாய் படேல் என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார்.. இதன் காரணமாகவே இன்று இந்தியா ஒரு ஒருங்கிணைந்த நாடாக வலுவாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அமித் ஷா, "இங்கு நமது நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெறாது என்று ஆரம்பத்தில் சிலர் சொன்னார்கள்.. ஆனால், அப்படிச் சொன்னவர்கள்தான் காணாமல் போனார்கள். பல சர்வாதிகாரிகளின் ஆணவத்தை இந்த அரசியல் சாசனம் நசுக்கியுள்ளது அரசியல் சாசன சட்டத்தை மாற்ற பாஜக முயல்வதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்கள். ஆனால், இது சட்டவிரோதமானது இல்லை.. உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான ஆப்ஷன் அரசியலமைப்பிலேயே இருக்கிறது. சர்வாதிகாரத்தின் பெருமையை மக்கள் உடைத்துவிட்டனர். சிலருக்கு இந்தியத்தன்மை ஒருபோதும் புலப்படாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இருந்த போது பேச்சு சுதந்திரத்தைக் குறைக்க அப்போது காங்கிரஸ் தான் அரசியல் சாசன சட்டத்தைத் திருத்தியது என்பசை நினைவு கூர விரும்புகிறேன். அப்போது இந்தியாவில் நிச்சயம் பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் அடைய முடியாது என்று சிலர் கூறினர். அவர்களுக்கும் அரசியலமைப்பு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இன்று நாம் உலகின் 5வது மிகப் பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். பிரிட்டனை விடப் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கிறோம். கடந்த 55 ஆண்டுகளில் காங்கிரஸ் சுமார் 77 முறை அரசியல் சாசனத்தைத் திருத்தியுள்ளது" என்று தெரிவித்தார்.

Related Post