திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். ஜாதி ரீதியிலான கொலைக்கு பழிக்கு பழியாக நிகழ்த்தப்பட்ட இந்த கொலை ஒருவரை வழக்கறிஞர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்ததோடு போலீசார் சரியாக பணி செய்யவில்லை என்று கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் திருநெல்வேலி - திருச்செந்தூர் ரோட்டில் அமைந்துள்ளது. இன்று காலையில் நீதிமன்ற வாசல் அருகே இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 4 பேர் கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. அதன்பிறகு 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து தப்பிய முயன்றனர். அப்போது வழக்கறிஞர்கள் 2 பேர் சேர்ந்து ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 பேர் தப்பித்துவிட்டனர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கொலையானவர் கீழநத்தத்தை சேர்ந்த சண்முகம் மகன் மாயாண்டி என்பதும், கடந்த ஆண்டு ஜாதி ரீதியாக கடந்த ஆண்டு நடந்த கொலை வழக்கில் மாயாண்டி ஆஜராக நீதிமன்ற வந்ததும் தெரியவந்தது. அதாவது திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்தவர் ராஜா மணி என்ற பட்டியலினத்தை சேர்ந்தவர் கடந்த ஆண்டு வெட்டி கொல்லப்பட்டார். அந்த கொலையில் தொடர்பு கொண்ட மாயாண்டியை தற்போது நீதிமன்ற வாசலில் கொன்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தப்பிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் தான் நீதிமன்ற வாசலில் நடந்த கொலையில் ஒருவரை போலீசில் பிடித்து கொடுத்த வழக்கறிஞர்கள் கடும் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ‛‛சம்பவம் நடந்தபோது 4 பேரை நேரில் பார்த்தோம். நாங்க தான் ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். நானும், இன்னொரு வழக்கறிஞரான எனது மாப்பிள்ளையும் தான் பிடி.. பிடி என்று பிடித்து கொடுத்தோம். இது எங்களுக்கு அவசியமா? காவல்துறை செய்ததை நாங்கள் இங்கே செய்துள்ளோம்.
காவல்துறையிடம் எங்கே உங்களின் துப்பாக்கி? எங்கே உங்களின் டிசி (போலீஸ் துணை கமிஷனர்)?, எங்கே உங்களின் ஏசி (உதவி போலீஸ் கமிஷனர்)? என்று கேட்டால் முழிக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் துப்பாக்கி காட்டி வசூல் செய்ய போறாரு எல்லா பக்கமும். ஆனால் இப்போது எங்கே சென்றார்? அவரை தயவு செய்து மாற்றுங்கள். அவரால் தான் இந்த கொலையே நடந்து இருக்கும்.
பணி நேரத்தில் எங்கே போனார்? துப்பாக்கி இருந்தால் அவர்களை பிடித்து இருக்கலாம். பெண் எஸ்ஐ தான் இருந்தார். அவரும் அதிர்ச்சியில் அப்படியே நின்றார். பாவம் அவர் என்ன செய்வார். எல்லோருக்கும் இது புதிதாக இருக்கிறது. நாங்களும் உயிரை துச்சமாக நினைத்து தானே இன்று அவரை பிடித்தோம். காரை ஒரு ஆளாக நான் மறிக்க அவங்க இறங்கி என்னை வெட்டினால் வெட்டினது தான்.
நீதிமன்றத்தில் 30-40 போலீஸ்காரர்கள் பாதுகாப்புக்கு இருக்காங்க. நீதிமன்ற போர்டு பக்கத்தில் வைத்து தான் வெட்டுனாங்க. போலீஸ் பயப்படுறாங்க. பயந்தா எதுக்கு டூட்டுக்கு வர்றீங்க.. ஏடிஜிபி என்ன சொல்லி இருக்காங்க. துப்பாக்கி எல்லோரும் வைச்சிக்கோங்கனு சொல்லுறாங்க. தப்பு செய்தால் துப்பாக்கியால் சுடுங்கங்க.. அந்த வழக்கை நாங்கள் பார்த்து கொண்டு மெடல் வாங்கி கொடுக்கிறோம். கண்முன்னாடி வெட்டி கொல்றாங்க.. எங்கேயோ நடந்து இருந்தால் பரவாயில்லை. வழக்கறிஞர்கள் நாங்கள் சும்மா இருக்க முடியாது. பக்கத்தில் 4- 5 வழக்கறிஞர்கள் இருந்திருந்தால் கண்டிப்பா தடுத்து இருப்போம். வெட்டி வாங்கினாலும் வாங்கினது தான்.
வழக்கறிஞர்களான எங்களுக்கு என்னங்க பாதுகாப்பு இருக்கு. இன்னைக்கு நாங்க பிடிச்சி கொடுத்து இருக்கோம். நாளைக்கு எங்களுக்கு பாதுகாப்பு என்ன? ரொம்ப மோசமான நிலைமை திருநெல்வேலி சிட்டியில் இருக்கு. காவல்துறையை கூண்டோடு மாற்றம் செய்யுங்கள். ஏசி, டிசி, இன்ஸ்பெக்டர் எல்லோரையும் மாத்துங்க'' என்று ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார்.