கிருஷ்ணகிரி: அண்ணாமலையை பிரதமர் மோடி மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.. அத்துடன் தமிழக பாஜக தலைவரை கடுமையாக விமர்சித்து, முனுசாமி பேசியிருப்பது பலரது கவனத்தையும் திருப்பியுள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்த நிலையில், நிறைய மாறுதல்கள் அதிமுகவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், எதுவுமே பெரிதாக நடக்கவில்லை. பாஜகவை கழட்டிவிட்டதால், வேறு கட்சிகள் கூட்டணி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவுமே அதிமுகவில் பெரிதாக நடக்கவில்லை.
முனுசாமி: தென்மாநிலங்களில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியில் பாஜக இறங்கியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியை எப்படியும் சமாதானப்படுத்தி கூட்டணி வைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. அதுவுமே நடக்கவில்லை.
எனவே, பாஜக - அதிமுக இரு கட்சிகளுமே தனித்தனியாக அணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்றே யூகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான், அதிமுகவின் கேபி முனுசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருக்கிறார்.
கிருஷ்ணகிரி புறநகர் போக்குவரத்து கழக பணிமனையில், அண்ணா தொழிற்சங்க அலுவலக திறப்புவிழா இன்று நடந்தது.. இந்த நிகழ்வில் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தார் அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி. முனுசாமி.
கிருஷ்ணகிரி: பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "அதிமுக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது தொடங்கியிருப்பதால், இனிமேல்தான், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச முடியும். அது முடிந்த பிறகு, அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அறிவிப்போம்.
அண்ணாமலை: தமிழகத்தில் பாஜக 39 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சொல்லி வருகிறார். தோ்தல் முடிந்த பிறகு, தமிழக மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் வீடு என்று அண்ணாமலை பேசி வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கும்போது, அவர் மாணவராக இருந்திருப்பார். வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்த பாஜகவை, 1998 எம்பி தேர்தலின்போது, தென் மாநிலத்திற்கு அழைத்து வந்து கூட்டணி வைத்தவர் ஜெயலலிதா.
கூட்டணி: அப்போதைய பாஜக தலைவர் வாஜ்பாய், அத்வானி 2 பேரையுமே சென்னை மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து, தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கியவர்களில் மிக முக்கியமான தலைவர் இருந்தவர் ஜெயலலிதா.
தமிழருக்கான உரிமையை தர மறுத்ததால்தான், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தே விலகினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற அந்த அமைப்பு நாங்கள் உருவாக்கி தந்தது என்பதை அண்ணாமலைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தன்னை முன்னிலைப்படுத்தி, பாஜகவை பின்னுக்குத்தள்ளியபடியே, அண்ணாமலை பேசி வருகிறார். அவருக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை...
ஆதாயம்: வாஜ்பாய் தலைமையில் பாஜக இருந்தபோது மோடி ஒரு தொண்டராகவோ அல்லது ஒரு மாநில தலைவராகவோ இருந்திருப்பார். ஆனால், வாஜ்பாயை வாழ்த்தி பேசிதானே, மோடி இந்த இடத்திற்கு வந்திருக்க முடியும்? ஆனால் அண்ணாமலையோ, வாஜ்பாய் பற்றி பேசுவதே கிடையாது.. மோடியை மட்டுமே புகழ்ந்து பேசி ஆதாயம் தேடி கொண்டிருக்கிறார்.. அத்துடன், பாஜகவின் மற்ற தலைவர்களையும் களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார். அண்ணாமலையை மோடி கட்டுப்படுத்த வேண்டும் என்றார். அதிமுக முனுசாமியின் இந்த பேச்சுக்கு, பாஜகவினர் பதிலடி தர துவங்கியிருக்கிறார்கள்.