அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் போராட்டம்- திருமாவளவன் அதிரடி!

post-img
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து அண்ணல் அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் போராட்டம் வரும் 28-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அதிரடியாக அறிவித்துள்ளார். அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலகக் கோரி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். மேலும் அமித்ஷாவின் உருவபொம்மைகளையும் தீயிட்டு எரித்தனர். நாடாளுமன்ற வளாகத்தில் விசிக எம்பிக்கள் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இந்தியா கூட்டணி எம்பிக்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், கோயிலுக்குள் நுழைந்தால் அக்கோயிலுக்குரிய "கடவுள்" பெயரைச் சொல்லுவது தான் வழிபடுவோரின் வாடிக்கை. அதேபோல- நாடாளுமன்றத்துக்குள்ளே நுழைந்தால் புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரைத் தானே சொல்லமுடியும்? கோயிலில் கடவுள் ! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர்! இதனையெல்லாம் அறியாதவரா என்ன உள்துறை அமைச்சர்? அவ்வளவு வெறுப்பு அவருக்கு புரட்சியாளர் அம்பேத்கர் மீது. சங்பரிவார் அமைப்பினரின் ஆழ் நெஞ்சில் என்னவுள்ளது என்பதை அவரே இன்று அம்பலப்படுத்திவிட்டார். சனாதனத்தில் ஊறிய நெஞ்சு! சமத்துவத்துக்கு எதிரான நஞ்சு! எனவும் கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் வரலாற்றை எவ்வளவு தான் இருட்டடிப்புச் செய்தாலும் மக்கள் முன்னால் அது வெளிப்பட்டே தீரும். பாஜகவின் மோசடிப் பிரச்சாரம் நீண்ட நாள் தாக்குப் பிடிக்காது. அமித் ஷாவுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சனாதனக் கும்பலுக்கும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மீது எந்த மரியாதையும் கிடையாது. அவர் மீது தீராத வெறுப்பு கொண்டவர்களே இந்த சனாதனவாதிகள். தலித் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே அம்பேத்கரை மதிப்பது போல அவர்கள் நாடகமாடுகிறார்கள். அந்த பகல் வேடம் அமித்ஷாவின் பேச்சால் அம்பலமாகிவிட்டது. எனவே, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவு செய்த அமித்ஷா அவர்கள் உடனடியாக இந்திய மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று வலியுறுத்துகிறோம் எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் வரும் 28-ந் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி கண்டனப் போராட்டம் நடைபெறும்; அம்பேத்கர் பெயரை 1,000 முறை உச்சரிக்கும் வகையில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து திருமாவளவன் தமது எக்ஸ் பக்கத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலகக்கோரியும்; நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது எனவும் அறிவித்துள்ளார்.

Related Post