சென்னை: அதிமுகவில் தற்போது நிலவிவரும் உரிமை கோரல் பிரச்சினையால் இரட்டை இலை சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்குவதற்காக வாய்ப்புகள் இருப்பதாக அதிமுகவைக் கடந்த 50 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்து வரும் பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார்.
இரட்டை இலை சின்னத்தைக் கட்சியின் உரிமை கோரல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள வரை அதிமுகவுக்கு அளிக்கக் கூடாது என தொடரப்பட்ட மனு மீதான விசாரணையில் 4 வாரத்திற்குள் முடிவுகளை எடுக்க உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்து விட்டார் என அக்கட்சியில் உள்ள பல லட்சக் கணக்கான தொண்டர்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில், அதில் ஒரு இடியை இறக்கி இருந்தது இந்த உத்தரவு.
இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் 19 ஆம் தேதிக்குள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரண்டு தரப்பும் எழுத்துப்பூர்வமாக விளக்கத்தை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடு வித்துள்ளது. மேலும் வரும் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் அறிவிப்பாணை வழங்கி இருக்கிறது.
இந்த மாதிரி கட்சி உரிமை கோரல் தொடர்பான போராட்டங்களைப் பல காலகட்டங்களில் அதிமுகவில் பார்த்திருக்கிறோம். 1989 இல் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜெ அணி மற்றும் ஜா அணி என இரண்டாக அதிமுக பிரிந்தது. அப்போது அதிமுக ஆட்சியிலிருந்தது. முதல்வராக வி.என். ஜானகி பதவியேற்றிருந்தார். அவர் அணியில் அமைச்சர்கள் உட்பட 90 சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு, பொதுக்குழு எனப் பல பொறுப்புகளிலிருந்தவர்கள் ஜானகி அம்மையார் அணியில்தான் இருந்தனர்.
ஆனால், அதை மீறி ஜெயலலிதா அணி கட்சியின் உரிமையில் பங்கு கோரியது. அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. பெரும்பான்மை இருந்தும் ஜானகி அணியை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரண்டு அணிகளாக உடைந்ததால் சின்னத்தை முடக்கியது. அப்படிப் பார்த்தால் அதிமுகவின் சட்டமன்றம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு பொறுப்பாளர்கள் பெரும்பான்மை எடப்பாடி பழனிசாமி அணிக்கே இருக்கிறது. அதன்படி எடப்பாடி அணிக்கு சாதகமாக தீர்ப்பு வருமோ என்று சிலர் சொல்கிறார்கள்.
இதைப் பற்றி பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சில விளக்கங்களை அளித்துள்ளார். அதிமுகவைக் கடந்த 50 ஆண்டுகளாக அருகிலிருந்து கவனித்தவர் இருவர். அவர், "டி.என்.சேஷன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவியிலிருந்த காலத்தில் இப்படித்தான் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளில் பிளவு ஏற்பட்டது. அப்போது அவர் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். 'கட்சியின் பிளவு வரும்போது வெறும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாமல், குறிப்பிட்ட கட்சியின் சட்ட திட்டங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆராய வேண்டும்' என அவர் சொல்லி இருந்தார்.
ஒருவேளை இப்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உரிமை கோரல் விவகாரத்தில் கட்சியின் விதிமுறைகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால், இரட்டை இலை சின்னம் முடிக்கப்படலாம். அதிமுகவின் விதி எண்: 43இன் படி அடிப்படை உறுப்பினர்களால் தலைமை தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என வலியுறுத்துகிறது. அதை நீக்கும் அதிகாரம் செயற்குழு,பொதுக்குழு என யாருக்கும் கிடையாது.
அப்படிப் பார்த்தால் பொதுக்குழு கூடித்தான் ஓபிஎஸ் நீக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த உரிமை கோரால் என்பது நீதிமன்றத்துடன் முடியவில்லை. தேர்தல் ஆணையமும் சம்பந்தப்பட்டுள்ளது. ஓபிஎஸ் நீக்கப்படும் வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கும் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்களை 2021 இல் தேர்தல் ஆணையத்திற்கு இந்த இருவரும் கையெழுத்திட்டு வழங்கியுள்ளனர்.
அந்த ஆவணம்தான் இதுவரை தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதை வைத்து ஓபிஎஸ் ஒரு விளக்கத்தை முன்வைக்கலாம். அதன்படி இபிஎஸ் தன்னை விலக்கியது சட்டப்படி செல்லாது என்றும் அவர் சொல்லலாம். அப்படிப் பார்த்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி" என்று கூறியுள்ளார்.