மொத்தம் 24 கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூரில் சந்திக்க உள்ளனர். தேசிய அளவில் மாநில கட்சிகள், எதிர்க்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகோர்க்க தொடங்கி உள்ளன. திமுக, காங்கிரஸ் , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை செய்தனர்.
கடந்த கூட்டத்தில் 14 கட்சிகள் பீகாரில் உள்ள பாட்னாவில் கலந்து கொண்ட நிலையில் இந்த முறை கூடுதல் கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. காங்கிரஸ் கட்சி சார்பாக இந்த கூட்டம் கூட்டப்படுகிறது. ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும் இதில் பங்கேற்க முடிவு செய்துள்ளன.
கடந்த முறை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் முழுக்க முழுக்க கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்த நிலையில் இந்த முறை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளார்.
அதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் கூட்டத்திற்கு முன்னதாக ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். லோக்சபா தேர்தலில் என்ன செய்வது? பாஜகவை எப்படி எதிர்கொள்வது, கூட்டணி அமைப்பதா, இடங்களை பகிர்ந்து கொள்வதா? பொது வேட்பாளர்களை அறிவிப்பதா என்பது உள்ளிட்ட விஷயங்களை ஆலோசனை செய்ய உள்ளனர்.
இந்த கூட்டத்தில் முன்னதாக ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பதில் குழப்பம் நிலவியது. டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசு மாற்றும் அதிகாரத்தை வழங்கும் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சிக்கு கோரிக்கை விடுத்தது. கடந்த மீட்டிங்கிலேயே இருவருக்கும் இடையில் இதனால் மோதல் ஏற்பட்டது.
இதில் காங்கிரஸ் முடிவு எடுத்தால்தான் எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்றும் ஆம் ஆத்மி கூறியது. இந்த நிலையில்தான் இந்த மசோதா விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக செயல்பட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்க்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதையடுத்து தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
இன்று நடக்கும் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மு க ஸ்டாலின், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, திருமாவளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இது தவிர, சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோர் இந்த மிக முக்கியமான கூட்டத்தில் பங்கேற்பார்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த கூட்டத்தில் திமுக கட்சி முக்கியமான 7 ஐடியாக்களை கொடுத்தது. அதன்படி 1) ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக உள்ள ஒரு கட்சியின் தலைமையில் மாநில வாரியாக கூட்டணி அமைக்கலாம். 2) அது சாத்தியமில்லை என்றால், நேரடிக் கூட்டணி இல்லாமலேயே சீட்-பகிர்வு ஏற்பாடு செய்யலாம்.
3) இரண்டும் சாத்தியமில்லை என்றால், ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கலாம். 4) தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரியான முடிவாக இருக்காது. 5) அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே பொதுவான குறைந்தபட்ச தேர்தல் பிளான் வகுக்கப்பட வேண்டும்.
6) கட்சிகளுக்கு இடையே எழக்கூடிய ஏதேனும் பிரச்சனைகளை தீர்க்க, ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்படும். 7) பிரதமர் வேட்பாளர் குறித்து இப்போது முடிவு எடுக்க வேண்டியது இல்லை, என்பது உள்ளிட்ட ஐடியாக்களை திமுக கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.