டெல்லி: டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதி தொடர்பாக இன்று சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது. சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது எடப்பாடி பழனிசாமி நடிப்பதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இந்தச் சூழலில் அதிமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான தம்பிதுரை இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதி தொடர்பாக விவாதம் நடந்தது. டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிமை ஏலம் விடக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்றத்தில் இருக்கும் உங்கள் (திமுக) எம்பிக்கள் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்க வேண்டும். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யத் தவறிவிட்டனர். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்திய பிறகே முதல்வர் கடிதம் எழுதுகிறார்" என்று பேசியிருந்தார்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டங்ஸ்டன் விவகாரம் குறித்து தனது ட்விட்டரில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் பழனிசாமி, அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார். சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்... தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!" என்றார்.
தம்பிதுரை: இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான தம்பிதுரை விளக்கமளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு ஏதோ அதிமுக ஆதரவு அளித்தது போல திமுகவினர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பொய்யான தகவலைப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். அவர் குறிப்பிட்டது போல நான் எப்போதும் நாடாளுமன்றத்தில் பேசியது கிடையாது.
மத்திய அரசு கனிமவள திட்டங்களைக் கடந்த ஆக. மாதம் கொண்டு வந்த போது நான் பேசியிருந்தேன். அப்போது இருந்த நிலவரமே வேறு.. இந்த சட்டம் வருவதற்கு முன்பு திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு நாட்டின் கனிம வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தனர். அப்போது ஏல முறை எதுவும் பின்பற்றப்படவில்லை.. ஏதுவுமே இல்லாமல் வளங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தனர். அப்போது நிலக்கரி ஊழல் என்ற மாபெரும் ஊழலை ஊடகங்கள் வெளிப்படுத்தின.
என்ன பேசினேன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் போல நிலக்கரியிலும் ஊழல் செய்தனர். சுரங்கத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்த திமுக காங்கிரஸ் கூட்டணி நடவடிக்கையால் நாட்டிற்கே பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதைத் தவிர்க்கவே மோடி அரசு கடந்த 2021ம் ஆண்டு கனிம வளங்களை ஏலம் முறையில் ஒதுக்கச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்த மசோதா கொண்டு வரும் போது தான் நான் பேசியிருந்தேன்.
ஆவணத்துடன் விளக்கம்: அப்போது நான், முன்பு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடந்ததை போன்ற ஊழல் மீண்டும் நடக்கக்கூடாது என்றால் கனிம வளங்களை நேரடியாகத் தனியாருக்குத் தரக்கூடாது என்றும் ஏல முறையில் வழங்குவதை வரவேற்கிறேன் என பொதுவாக மட்டுமே சொன்னேன். மதுரையில் மேலூர் டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விட உரிமை தர வேண்டும் என்று நான் அப்போது கூறவில்லை" என்று கூறிய அவர், தனது பேச்சு தொடர்பான நாடாளுமன்ற அவை குறிப்பையும் செய்தியாளர்களிடம் காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மேலும், தமிழகத்தில் உள்ள திமுக அரசு கனிம வளங்களை ஏலம் விடுவதில்லை. இதனால் முறைகேடாக அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை திமுக அரசு தடுக்க தவறிவிட்டது என்றும் இதனால் ஏல முறை இருந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று நான் கூறியிருந்தேன். டங்ஸ்டன் நிறுவனத்திற்கு ஏலம் விட வேண்டும் என்று நான் பேசியதே கிடையாது. ஸ்டாலின் பேசியது தவறு. அவர் பேசிய தவறு என்பதைப் பொதுவெளியில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage