"உங்க வீடு இருக்கும் நிலமே உங்களுடையது இல்லை.." அல்லு அர்ஜுன் விவகாரம்.. பகீர் கிளப்பிய போலீஸ் அதிகாரி

post-img
ஹைதராபாத்: புஷ்பா 2 படச் சிறப்புக் காட்சியின் போது பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நேற்று அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டசபையிலேயே சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையின் உதவி ஆணையர் விஷ்ணு மூர்த்தி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். புஷ்பா 2 சிறப்புக் காட்சியின் போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டது. அப்போது போலீசார் அனுமதி தராதா நிலையில், அல்லு அர்ஜுன் அங்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. புஷ்பா 2 உயிரிழப்பு: அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும், அவரது மகன் ஐசியு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கடந்த வாரம் கைது செய்தனர். கீழமை நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட போதிலும், உயர் நீதிமன்றம் அவருக்கு 4 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஜாமீன் ஆவணங்கள் வரத் தாமதம் ஆனதால் ஒரு நாள் மட்டும் அவர் சிறையில் இருக்க நேரிட்டது. இதற்கிடையே நேற்றைய தினம் தெலுங்கானா சட்டசபையில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். போலீசார் பேச்சை அல்லு அர்ஜுன் கேட்கவில்லை என்றும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது என்று சொல்லியும் படம் முடிந்த பிறகே தியேட்டரில் இருந்து கிளம்புவேன்னு அல்லு அர்ஜுன் சொன்னதாக ரேவந்த் ரெட்டி சட்டசபையில் குறிப்பிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அல்லு அர்ஜுன் எப்படி பிரஸ் மீட் நடத்தலாம்: இதற்கிடையே காவல்துறையின் உதவி ஆணையர் விஷ்ணு மூர்த்தி சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் ரிமாண்ட் செய்யப்பட்ட ஒருவர்.. இந்த வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. அப்படியிருக்கும் போது குற்றம் சாட்டப்பட்டவர் ஒருவர் எப்படி வழக்கு குறித்து பிரஸ் மீட் நடத்த முடியும்.. சந்தியா தியேட்டர் விவகாரத்தைப் பொறுத்தவரை அல்லு அர்ஜுன் போலீசார் கூறியதைக் கேட்கவே இல்லை. அதுவே பிரச்சினைக்குக் காரணம். நாம் சாலையில் செல்லும் போது நாய்க்குட்டி உயிரிழந்தால் கூட நின்று என்ன நடந்தது எனப் பார்ப்போம். ஆனால், அவர் கண் முன்னாலேயே இருவர் சரிந்து விழுந்து இருக்கிறார்கள். ஆனால், அது குறித்து அவர் துளியும் கவலைப்படவில்லை. இந்தச் சூழலிலும் அவரால் சக்சஸ் மீட்களை நடத்த முடிந்துள்ளது. சட்டப்படி நடவடிக்கை: கடந்த 15 நாட்களாக போலீசார் மீது சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. பண திமிரில் இருக்கும் சில செல்வந்தர்கள் போலீசாரின் சுயமரியாதையைக் கெடுக்கும் வகையில் செயல்படுகின்றனர். வெறும் 10 நிமிடங்கள் நாங்கள் (போலீசார்) எங்கள் கடமையைச் செய்யவில்லை என்றால் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். போலீசாருக்கு எதிராக அவதூறான கருத்துகளைச் சொல்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். வீடே சொந்தம் இல்லை: தொடர்ந்து அல்லு அர்ஜுன் விவகாரம் தொடர்பாகப் பேசிய அவர், "ஒன்றை மறந்துவிடாதீர்கள். நீங்கள் வசிப்பது உங்கள் சொந்த இடம் இல்லை.. ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வீடு வாங்க எவ்வளவு ஆகும் தெரியுமா.. ஒரு ரூபாய், 2 ரூபாய்க்கு எல்லாம் வாங்கிவிட முடியாது. அது குத்தகை நிலம் தான். தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் முன்பு இங்கே ஆட்சியில் இருந்தவர்கள் ஒருவர், ஜூப்லி ஹில்ஸில் உங்களுக்கு நிலங்களைக் குத்தகைக்கு வழங்கினார். உங்களுக்கு மட்டும் இல்லை. பலருக்கு இதுபோல நிலத்தை வழங்கி இருந்தார். ஓவராக பறக்க நினைக்காதீர்கள்.. பொதுமக்கள் உங்கள் சிறகுகளை வெட்டிவிடுவார்கள். இவர்கள் எடுக்கும் படத்தைக் கூட பாருங்கள்.. எப்படி கொள்ளை அடிப்பது, எப்படித் தப்பி ஓடுவது என்று தான் காட்டுகிறார்கள். புஷ்பா படத்தில் போலீசாரை மிக மோசமாகச் சித்தரிக்கும் வகையிலான காட்சிகளை எல்லாம் வைத்து இருக்கிறார்கள். இதன் மூலம் அல்லு அர்ஜுன் போலீசாரை இழிவுபடுத்த முயல்கிறாரா அல்லது கடத்தல்காரர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்ல வருகிறாரா.. சென்சார் போர்ட் எப்படி இதுபோன்ற படங்களை அனுமதிக்கிறார்கள் என்றே புரியவில்லை" என்று கடுமையாக விமர்சித்தார்.

Related Post